பவன் கல்யாணின் விமர்சனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கலையாண் தொடர்ந்து கருத்துகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் திருப்பதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், “இங்கே நிறைய தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தமிழிலேயே சொல்கிறேன். சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார்.
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள்.
ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது” என்று மறைமுகமாக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சாடியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் பவன் கலையாண் பேசியது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “Okay, Let’s Wait and see” என்று கூறியிருக்கிறார்.