தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களது விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வருகின்றனர். ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 190 விசைப்படகுகள், 20 நாட்டுப்படகுகளை இதுவரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 150 மீனவர்களும் இலங்கை சிறையில் உள்ளனர். இவர்களில் 21 பேருக்கு தண்டனை மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டுத்தர வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் இன்று குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மீனவர் சங்கத் தலைவர்கள் சேசுராஜ் சம்சன், சகாயம், எமரிட் உள்ளிட்டோர் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
-
இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதுடன், படகுளையும் விடுவிக்க மத்திய அரசு ராஜாங்க நடவடிக்கை எடுக்கவும், மீட்க இயலாத படகுகளுக்கு மாநில அரசு போல் மத்திய அரசும் நிவாரண இழப்பீடு வழங்க வேண்டும்
-
பாரம்பரிய மீன்பிடி பகுதிகளான வங்காளவிரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க பேச்சுவார்த்தை மூலம் வாய்ப்பு வழங்க வேண்டும்.
-
மீனவர்கள் தங்கள் பிரச்னை குறித்து எடுத்துரைக்க மீனவ பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க, தமிழக முதல்வர் வாய்ப்பு பெற்றுத்தர வேண்டும்.
-
மீனவர்களின் இந்த கோரிக்கைகளை உரிய காலத்திற்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவில் பாம்பனில் திறக்கப்பட உள்ள புதிய ரயில் பாலத்தில் அனைத்து மாவட்ட மீனவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளுடன் இணைந்து மறியலில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை. என்று மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.