திருமண உறவுக்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமையை (Marital Rape) கிரிமினல் குற்றமாகக் கருதவேண்டியதில்லை என உச்ச நீதிமன்றத்தில் வாதாடியிருக்கிறது மத்திய அரசு!
Marital Rape-ஐ குற்றமாகக் கருதுவது உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என வாதாடியுள்ளனர். மேலும் திருமண உறவுக்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை சட்டப்பூர்வமான பிரச்னை என்பதைவிட, ‘சமூக பிரச்னை’ என எடுத்துக்கொள்வதே சரியானது என்றும் இது சமூகத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறியுள்ளது மத்திய அரசுத் தரப்பு.
“இந்த விஷயத்தில் அனைத்து தரப்பிலும் அல்லது அனைத்து மாநிலங்களிலும் முறையான ஆலோசனை பெறாமல் முடிவெடுக்க முடியாது” எனக் கூறியுள்ளது மத்திய அரசு.
மத்திய அரசு, திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் சம்மதத்தைப் பெற்றுத்தராது என்பதையும் திருமணத்துக்குப் பின்னான அத்துமீறல்களுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டாலும், திருமணத்துக்கு வெளியில் நடக்கும் அத்துமீறல்களுக்கும் திருமண உறவுக்குள் நடக்கும் அத்துமீறல்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது என வாதாடியது.
திருமண உறவில் கணவருக்கு மனைவியுடன் பாலியல் உறவுகொள்வதற்கான தொடர்ச்சியான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் மட்டுமே ஒரு பெண்ணை பாலியல் உறவுக்கு வற்புறுத்தும் உரிமையை வழங்கிவிடாது. எனினும் திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு சட்டத்தில் (anti-rape) தண்டனை வழங்குவது சரியானதாக இருக்காது என்றது மத்திய அரசுத் தரப்பு.

மேலும், ஏற்கெனவே திருமணத்துக்குள் பெண்களின் சம்மதத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியிருப்பதாகவும் கூறியது. குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் (2005) திருமணமான பெண்களுக்கு உதவும் என்பதையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது.
“கணவன் மனைவி உறவில் இருக்கும் பல அம்சங்களில் பாலியல் உறவும் ஒன்றாகும். அது திருமணத்தின் அடித்தளமாக இருக்கிறது. இந்தியச் சமூக – சட்ட சூழலில் திருமணத்தின் தன்மையைக் கருத்தில்கொண்டு, குடும்ப அமைப்பு அவசியம் என நீதிமன்றம் கருதினால், சில விதிவிலக்குகளை ரத்து செய்யக் கூடாது” என்று வாதாடியது நீதிமன்றம்.
திருமண உறவில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்!