கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீது பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். காஸா உள்ளிட்ட நகரங்களின் மீது இஸ்ரேல் நிகழ்த்திய கோரத் தாண்டவத்தில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 40,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இது தவிர சமீப நாட்களாக லெபனானிலும் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல். குறிப்பாக, ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் வீழ்த்தப்பட்டனர்.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த அக்.1-ஆம் தேதி நள்ளிரவில் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஏறக்குறைய 200 ஏவுகணைகளை வீசி தாக்குதலை தொடங்கியது ஈரான். இதில் 90 சதவீத ஏவுகணைகள் குறிவைத்த இலக்குகளை சரியாக தாக்கியதாக ஈரான் புரட்சிப் படை தெரிவித்தது. ஆனால், இஸ்ரேல் ராணுவமோ பெரும்பாலான ஏவுகணைகள் பாதியிலேயே தடுத்து அழிக்கப்பட்டதாக கூறுகிறது.
இந்த ஏவுகணை தாக்குதலில் சில விமானப் படை முகாம்கள் சேதம் அடைந்ததாகவும், ஆனால் போர் விமானங்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்திடம் ஏவுகணைகளை வானிலேயே மறித்து அழிக்கும் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ‘அயர்ன் டோம்’ (Iron Dome) எனப்படும் கருவி இருக்கிறது. கடந்த ஏப்ரலில் ஈரான் வீசிய ஏவுகணைகளில் 99% வானிலேயே அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது.
2023-ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் படி, ஈரானிடம் 6 லட்சத்து 10 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். அதில் 3 லட்சத்துக்கு 50 ஆயிரம் பேர் ராணுவத்திலும், 1 லட்சத்துக்கு 90 ஆயிரம் பேர் ஈரான் புரட்சிப் படையிலும், 18 ஆயிரம் பேர் கடற்படையிலும், 52 ஆயிரம் பேர் விமானப் படையிலும் உள்ளனர். இதுதவிர கூடுதலாக 3 லட்சத்துக்கு 50 ஆயிரம் உபரி வீரர்களையும் ஈரான் கொண்டுள்ளது.
இன்னொருபுறம் இஸ்ரேலிடம் 1 லட்சத்துக்கு 69 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்துக்கு 29 ஆயிரம் பேர் ராணுவத்திலும், 34 ஆயிரம் பேர் விமானப் படையிலும், 9 ஆயிரத்துக்கு 500 பேர் கடற்படையிலும் உள்ளனர். கூடுதலாக 4 லட்சத்துக்கு 65 ஆயிரம் உபரி வீரர்களும் உள்ளனர்.




ஈரானிடம் 17 நீர்மூழ்கிக் கப்பல்கள், 68 ரோந்து மற்றும் கடற்படைகள், ஏழு போர்க் கப்பல்கள், 23 விமானம் தரையிறங்கும் கப்பல்கள் உள்ளன. இஸ்ரேலிடம் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 49 ரோந்து மற்றும் கடற்படைகள் உள்ளன.
ஈரானிடம் 12 வகையான ஏவுகணைகள் உள்ளன. இஸ்ரேலிடம் நான்கு வகையான ஏவுகணைகள் உள்ளன.
இஸ்ரேலின் கையிருப்பில் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக உறுதியான தகவல் எதுவும் இல்லை.
இஸ்ரேலை விட அதிக எண்ணிக்கையிலான ஆயுதங்கள், படை வீரர்களை ஈரான் கொண்டுள்ளது என்பது தெளிவு. ஆனால், அவற்றை எதிர்கொள்ளும் நவீன தொழில்நுட்பத்தில் இஸ்ரேல் முன்னிலை வகிக்கிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு இருக்கிறது என்றால், ஈரானுக்கு ஆதரவாக லெபனான், ஏமன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுத்து வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.
தாக்குதல் ஏன்?
கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த ஒரு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு காரணம் இஸ்ரேல்தான் என்று ஈரான் குற்றம்சாட்டியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அவருடன் ஈரான் புரட்சிப் படையின் மூத்த கமாண்டர்களில் ஒருவரான அப்பாஸ் நில்ஃபோரூஷனும் உயிரிழந்தார்.

இந்தக் கொலைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஆன்மிக தலைவரான ஆயத்துல்லா கொமேனியின் உத்தரவின் பேரில் இந்த ஏவுகணை தாக்குதலை ஈரான் முன்னெடுத்ததாக கூறப்படுகிறது. ஈரானால் ஆதரிக்கப்படும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் இரண்டு இயக்கங்களும் இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டவை என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டியது அவசியம்.
ஈரானின் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ‘மிகப் பெரிய தவறு’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கான விலையை ஈரான் கொடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
ஈரானிய அரசியல் என்பதே அமெரிக்காவுக்கு சவாலாக விளங்குவது மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலங்களை விடுவிப்பது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒன்று. அவை ஈரானின் அரசியல் அடையாளத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன. இந்த கோட்பாட்டில் ஈரான் செயல்படவில்லை என்றால், அது தன்னுடைய அடையாளத்தையே இழக்கும் அபாயம் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
எனினும் இஸ்ரேல் மீதான இந்த நேரடி தாக்குதல் என்பது ஈரான் முன்னெடுத்த ஒரு வெளிப்படையான ‘ரிஸ்க்’ ஆன நடவடிக்கைதான் என்கின்றனர் உலக அரசியல் நோக்கர்கள்.
ஈரானில் சமீப ஆண்டுகளாக அரசியல் ரீதியாக சில தீவிரமான உள்நாட்டு பிரச்னைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஹிஜாபை சரியாக அணியவில்லை என்பதால் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பெண்களின் போராட்டம் ஈரானின் அரசியல் அடித்தளத்தை ஆட்டம் காணச் செயதுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான இந்த போக்கு ஈரானில் நடக்கும் இந்த எதிர்ப்புக் குரல்களை மேலும் வலுப்பெறச் செய்யலாம் என்று கவலையும் ஈரான் ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் இல்லை.

கூடுதலாக, ஈரானின் புதிய அதிபரான மசூத் பெசஷ்கியான் மேற்கத்திய நாடுகளுடன் ஈரானின் உறவை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை கொண்டுள்ளார். சர்வதேச சமூகத்துடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். ஆனால் பிரச்னை என்னவென்றால் கடந்த சில ஆண்டுகளால ஈரான் உலக அரங்கில் தனித்து விடப்பட்ட ஒரு நாடாக மாறிவிட்டது.
குறிப்பாக, கடந்த ஆண்டு தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் பிரச்சினைக்கு பிறகு. அப்போதிருந்து, எந்த மேற்கத்திய நாடும் ஈரானுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதை அரசியல் ரீதியாக உகந்ததாக கருதவில்லை.
உலக அரங்கில் தன்னுடைய இமேஜை சரிசெய்ய வேண்டிய கட்டத்தில்தான் ஈரான், இஸ்ரேல் மீதான் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ஆனாலும் இந்த தாக்குதல் முடிவை எடுத்தது ஈரான் அதிபர் அல்ல.
இது முழுக்க முழுக்க ஈரானின் ‘சுப்ரீம் லீடர்’ என்று அழைக்கப்படும் ஆயத்துல்லா அலி கொமேனியின் முடிவு. அவரே ஈரான் புரட்சிப் படை (ஐஆர்ஜிசி) தலைவராகவும் இருக்கிறார்.
காஸா மீதான இஸ்ரேலின் உக்கிர தாக்குதல் தொடங்கியது முதலே ஒரு கடுமையான தாக்குதலை ஐஆர்ஜிசி மூத்த தலைவர்கள் பரிந்துரைத்து வந்தனர். ஒருவழியாக கொமேனி தற்போதுதான் அவர்களுக்கு செவிமடுத்துள்ளதாக தெரிகிறது.
ஒரு பக்கம் இஸ்ரேல், இன்னொரு பக்கம் அமெரிக்கா, இன்னொருபக்கம் உள்நாட்டு பிரச்னைகள் என மும்முனை சவால்களை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஈரானுக்கு இருக்கிறது.
இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிடமிருந்து ஒரு நேரடி தாக்குதல் கட்டாயம் இருக்கும் என்பது ஈரானுக்கு தெரியாமல் இருக்காது. அந்தத் தாக்குதலில் அமெரிக்காவின் பங்கும் அதிகம் இருக்கும்.

எனினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அது தயாராகவே இருக்கிறது. காரணம், இந்த தாக்குதலில் முதலில் பாதிக்கப்படப்போவது பாரசீக வளைகுடாவில் இருக்கும் அமெரிக்காவின் போர் மற்றும் வணிக கப்பல்கள்தான். இதனால் மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்புக்கும் வணிக செயல்பாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.
எனவே, இஸ்ரேலைத் தாக்குவது என்பது ஒரு மிகப் பெரிய பதிலடிக்கு வழிவகுக்கும் என்பதையும், அந்த பதிலடி அமெரிக்காவின் ஆதரவுடன் நடக்கும் என்பதையும் ஈரான் நிச்சயம் அறியும். ஆனால், அதற்கான விலையை ஈரான் கொடுக்க முழுமையாக தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb