Israel vs Iran: “இஸ்லாமிய நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும்” – ஈரானின் சுப்ரீம் லீடர் பேசியது என்ன?

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் உச்ச கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறது இஸ்ரேல். உலக நாடுகள் அணிதிரண்டு ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஈரானின் உச்ச தலைவர் (Supreme Leader) அயதொல்லா செய்யது அலி காமேனி (Ali Khamenei) 5 ஆண்டுகளில் முதல்முறையாக வெள்ளைக்கிழமை கூடுகையில் பேசியுள்ளார். இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை நியாயப்படுத்துவதாகவும், இஸ்லாமியர்கள் ஒற்றுமைக்கு குரலெழுப்புவதாகவும் அவரது பேச்சு அமைந்தது.

தெஹ்ரான் மையத்தில் உள்ள இமாம் காமேனியின் பிரமாண்ட மசூதியில் தொழுகையை வழிநடத்தினார். தனது பிரசங்கத்தில் பேசிய அவர், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு குறைந்த பட்சத் தண்டனைதான் எனப் பேசினார்.

ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட இஸ்ரேல் எதிர்ப்பு ஆயுத அமைப்புகளுக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தியதுடன், தேவைப்பட்டால் ஈரான் இன்னும் தீவிரமான ஏவுகணை தாக்குதல்களை நடத்த முடியும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

“நாம் நம் கடமையை தள்ளிப்போடவோ, அவசரப்படவோ இல்லை. அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் முடிவெடுப்பவர்கள் சரியானதாகவும் நியாயமானதாகவும் கருதப்படும் செயல்கள் குறித்த நேரத்தில் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மீண்டும் செய்யப்படும்” என இஸ்ரேலை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார் காமேனி.

“இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே குரானின் கொள்கை. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால், இறைவனின் மதிப்பைப் பெறுவீர்கள், உங்கள் எதிரியை வெல்வீர்கள்… உங்களைப் பிரித்து ஆள்வதே எதிரியின் கொள்கை. அவர்கள் இந்த கொள்கையை இஸ்லாமிய நாடுகளில் பலவகைகளில் நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர். ஆனால் இன்று, இஸ்லாமிய நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும். உங்கள் எதிரியின் தந்திரத்தில் இருந்து மீண்டு வருவதற்கான நாள் இன்று” என இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்திப் பேசினார்.

Israel – Iran Conflict:

“இஸ்லாமியர்கள் இனியும் அலட்சியமாக இருக்கக் கூடாது. நம் பாதுகாப்புக் கச்சையை இறுக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை அனைத்து நாடுகளும் விடுதலை பெற வேண்டும்” என்றார் ஈரானி காமேனி.

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் செய்யது ஹசன் நஸ்ரல்லா, ஈரானிய ஜெனரல் அப்பாஸ் நில்ஃபோருஷன் மற்றும் பிற வீரர்களுக்காக பிரார்த்தனை நடைபெற்றதாக ஈரான் அரசு ஊடகம் IRNA தெரிவிக்கிறது.

இஸ்ரேலுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கும் விதமாக, “தேவைப்பாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தும்” என்றும் பேசினார் சுப்ரீம் லீடர்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…