திமுக 2021-ல் ஆட்சி அமைத்த சமயத்தில் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. அமைச்சர் பதவிக்கு பலரின் பெயர்கள் அடிப்பட்ட நிலையிலும், யாருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் டெல்டாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தனி தனி பொறுப்பு அமைச்சரை நியமனம் செய்தார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ், திருவாரூருக்கு சக்கரபாணி, மயிலாடுதுறைக்கு மெய்யநாதன், நாகைக்கு ரகுபதி பொறுப்பு அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்.
அரசு நிகழ்ச்சிகள் பொறுப்பு அமைச்சர்கள் தலைமையில் நடந்தன. அதே போல் உள்கட்சி பிரச்னையும் அவர்களுடைய கவனத்துக்கு சென்றது. இந்தநிலையில் மன்னார்குடி தொகுதியை சேர்ந்த டி.ஆர்.பி.ராஜா அமைச்சர் ஆன பிறகு அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்த சக்கரபாணி அதன் பின்னர் எதிலும் தலையிடுவதில்லை. அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அனைத்தும் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் தான் நடக்கிறது. ஆனாலும் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பு அமைச்சராக சக்கரபாணி தொடர மாட்டார் என்பது போன்ற எந்த கருத்தையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்த சூழலில் அமைச்சரவை மீண்டும் மாற்றம் நடைபெற்றது. துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி, கோவி.செழியன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தொகுதியை சேர்ந்த கோவி.செழியன் உயர் கல்வித்துறை அமைச்சர் ஆகியிருக்கிறார். இனி அவர் தான் தஞ்சாவூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருப்பாரா அல்லது வழக்கம் போல் அன்பில் மகேஸ் நீடிப்பாரா என்பது திமுகவினர் மத்தியில் பேசு பொருளாகியிருக்கிறது.
இது குறித்து கட்சி உள்விபரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம், `திருச்சியில் சீனியரான அமைச்சர் நேரு கோலோச்சி வருவதால், அதே மாவட்டத்தை சேர்ந்த அன்பில் மகேஸ் அமைச்சராக இருப்பதால் அங்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவே அன்பில் மகேஸை தஞ்சாவூர் பொறுப்பு அமைச்சராக நியமித்தார் முதல்வர்’ என அந்த சமயத்தில் பரவலாக பேசப்பட்டது. அன்பில் மகேஸூம் திருச்சியைவிட தஞ்சாவூரில் தான் அதிக கவனம் செலுத்தினார். இதனால் நேரு தரப்பிற்கும், அன்பில் தரப்பிற்கும் எவ்விதமான கருத்து வேறுபாடுகளும் ஏற்படாமல் எல்லாம் சுமூகமாக நகர்ந்தது.
பொறுப்பு அமைச்சராக இருந்தாலும், தலைமைக்கு நெருக்கமானவர் என்பதால் அரசு நிகழ்ச்சிகளை தவிர தஞ்சாவூரில் லோக்கல் பாலிட்டிக்ஸ் விவகாரங்களில் பட்டும் படாமலேயே இருந்தார் அன்பில் மகேஸ். எம்.பி முரசொலிக்கு சீட் வாங்கி தந்தது உட்பட மேல்மட்ட அரசியல் நகர்வுகளை மட்டும் செய்து வந்தார். தற்போது கோவி.செழியன் அமைச்சர் ஆகியிருக்கும் சூழலில் இனி தஞ்சாவூரின் பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஸ் வலம் வருவாரா அல்லது அமைச்சர் சக்கரபாணி போல் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விடுவாரா என்பது தெரியவில்லை. தஞ்சாவூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், கட்சி விவகாரம் உள்ளிட்ட பலவற்றை அன்பில் மகேஸ் அல்லது கோவி.செழியன் இவர்களில் யார் கவனத்துக்கு கொண்டு செல்வது என்கிற பெரிய குழப்பம் தற்போது நிலவுகிறது. கட்சித்தலைமை இது குறித்து முறையாக அறிவித்து திமுகவினர் குழப்பத்தை தீர்க்க வேண்டும்“ என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb