VCK : மதுவிலக்கு தேசியக் கொள்கை `டு’ சட்டப்பேரவையில் தீர்மானம் – திருமாவளவன் முன்வைத்த தீர்மானங்கள்!

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஹைலைட்ஸ் இதோ…

அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47-ல் கூறியுள்ளவாறு மது விலக்கை தேசியக் கொள்கையாக அறிவிப்பு செய்திடுக.

இந்திய அரசமைப்புச்சட்டத்தின் உறுப்பு 47: “அரசு தன் மக்களின் ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றைத் தனது முதன்மைக் கடமைகளாகக் கருதும். குறிப்பாக, மருத்துவ நோக்கங்களுக்காக அன்றி போதை தரும் பானங்கள் மற்றும் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் மருந்துகள் ஆகியவற்றின் நுகர்வுக்குத் தடையைக் கொண்டுவர அரசு முயற்சிக்கும்” என்று கூறுகிறது.

விசிக மது ஒழிப்பு மாநாடு

இதன் அடிப்படையிலேயே சுதந்திரத்திற்குப் பிறகு அமைந்த காங்கிரஸ் அரசு மது விலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து இந்தியா முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்காகப் பரிந்துரைகளைப் பெற்றது. அதன் பிறகு நீதிபதி தேக்சந்த் ஆணையத்தை அமைத்து அதன் பரிந்துரைகளையும் பெற்றது. அப்போதிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசின் இந்த முயற்சிகளுக்கு மாநில அரசுகள் ஒத்துழைக்காததால் அத்துடன் அது கைவிடப்பட்டது.

அதன் பிறகு மாநில அரசுகள் மது விலக்கை ரத்து செய்து சட்டம் இயற்றி மதுக்கடைகளை அனுமதித்துள்ளன. இது அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். “சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது பொதுவான விதத்திலோ அரசு எடுக்கும் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும், ‘நியாயமானதாகவும், பொது நலனை அடிப்படையாகக் கொண்டும் இருக்க வேண்டும்’ தனது நடவடிக்கை நியாயமாகவும் பொது நலனுக்கு உதவுவதாகவும் இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உகந்ததாக அது உள்ளதா என்ற அளவுகோலை மாநில அரசுப் பயன்படுத்த வேண்டும்” என கஸ்தூரிலால் எதிர் ஜம்மு காஷ்மீர் அரசு (1992) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

திருமாவளவன்

அவ்வாறு பார்க்கும்போது மதுவிலக்கை ரத்து செய்வதென்பது பொது நலனுக்கு உகந்தது அல்ல என்பதோடு நியாயம் அற்றதும் ஆகும். எனவே, இதை ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது. தேசிய மதுவிலக்குக் கொள்கையை இயற்றுவதன் மூலமே மதுவிலக்குக்கு எதிரான மாநில அரசுகளின் நடவடிக்கைகளைத் தடுக்க முடியும். எனவே அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47 இல் கூறியுள்ளவாறு மது விலக்கைத் தேசியக் கொள்கையாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டுமென இந்திய ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மதுக்கடைகளை முற்றிலுமாக மூடுவதற்கான கால அட்டவணையை அறிவித்திடுக!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 86 ஆயிரம் ஆண்கள், 22 ஆயிரம் பெண்கள் கஞ்சா பயன்படுத்துவதாகவும்; ஒப்பியம் பயன்படுத்துகிற ஆண்களின் எண்ணிக்கை 1,71,000, பெண்களின் எண்ணிக்கை 6000 என்றும்; மயக்கம் தரும் மாத்திரைகளைப் பயன்படுத்துகிறவர்களில் ஆண்கள் 1.92 லட்சம் பேர் பெண்கள் 10 ஆயிரம் பேர் எனவும் கொக்கேய்ன் என்ற போதைப் பொருளைப் பயன்படுத்துகிறவர்கள் ஆண்களில் 7000 பேரும் பெண்களில் 1000 பேரும் உள்ளனர் என்றும்; தமிழ்நாட்டில் ஏ.டி.எஸ். புகைப்பதன் மூலம் மயக்கம் தரும் போதைப் பொருட்கள் (Inhalants) புத்தியை நிலை குலையச் செய்யும் போதைப் பொருட்கள் (Hallucinogens) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறவர்களில் ஆண்கள் 1.82 லட்சம், பெண்கள் 13 ஆயிரம் பேர்” எனவும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் 13.12.2023 அன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளிக்கப்பட்ட எழுத்துபூர்வமான விடையில் அப்போது ஒன்றிய அரசின் சமூக நீதித்துறை இணை அமைச்சராக இருந்த நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

இந்தியா முழுவதும் மது அருந்துபவர்களின் சராசரி 22% எனவும் தமிழ்நாட்டில் அது 32% ஆக உள்ளது எனவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எனவே, தமிழ்நாடு அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கையைத் தற்போதுள்ளதைக் காட்டிலும் கூடுதலான வேகத்தில் குறைக்க வேண்டும். அத்துடன், முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை அறிவிக்க வேண்டும் என இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக!

மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டுமென்றும்; மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி அளிக்க வேண்டுமென்றும்; 16 ஆவது நிதிக்குழுவில் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வைத் தீர்மானிக்கும் போது மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்குக் கூடுதலாக நிதியைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அதை இந்திய ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று இம் மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

விசிக மாநாடு

இதர தீர்மானங்கள் சுருக்கமாக:-

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்கிடுக.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு அளித்திடுக.

மதுவிலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திடுக!

போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுத்திடுக!

மது – போதைப் பொருள்கள் ஒழிப்பு பரப்புரையில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்துக.

குடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனிப் பிரிவுகளை ஏற்படுத்துக!

மது – போதை அடிமைகளுக்கு மறுவாழ்வளிக்க மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திடுக.

டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கிடுக.

மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக.

மதுவிலக்கு பரப்புரையில் அனைத்துத் தரப்பினரும் இணைய வேண்டும்.