Love Jihad: “இந்தியா மீதான சர்வதேச சதி லவ் ஜிகாத்” – சர்ச்சையைக் கிளப்பியதா உ.பி. நீதிமன்ற தீர்ப்பு?

தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் எப்படி `நாடக காதல்’ என்ற குற்றச்சாட்டை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது சுமத்துகிறார்களோ, அதுபோல தேசிய அளவில் இஸ்லாமியர்கள் மீது சில வலதுசாரி தரப்பினர் வைக்கும் பெரும் குற்றச்சாட்டு லவ் ஜிகாத் (Love Jihad).

Love Jihad

இந்த நிலையில், ‘சட்ட விரோத மதமாற்றத் தடைச் சட்டம்’ அமலில் இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் மீதான விசாரணையின்போது, கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் லவ் ஜிகாத்தை இந்தியாவுக்கெதிரான சர்வதேச சதி என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, முகமது ஆலிம் என்ற என்ற இஸ்லாமிய இளைஞர், தன்னை ஆனந்த் என்று கட்டிக்கொண்டு காதலித்து திருமணம் செய்ததாகவும், பின்னர் அவரும் அவரின் தந்தையும் மதம் மாற வற்புறுத்தியதாகவும் 23 வயது இந்துப் பெண் ஒருவர் கடந்த ஆண்டு காவல்துறையில் புகாரளித்தார்.

அதைத்தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் அந்த நபர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும், விசாரணையின்போது தனது பெற்றோர் மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் அழுத்தத்தால்தான் புகாரளித்ததாக அந்தப் பெண் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில், கடந்த திங்களன்று பரேலி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருமணம் செய்துகொண்ட பின் அந்தப் பெண்ணிடம் அவர் உடலுறவு கொண்டு அதனை காணொளி எடுத்து மிரட்டியதாக வாதிட்டார்.

நீதிமன்றம்

விசாரணையின் முடிவில் அந்த இளைஞருக்கு ஒரு லட்சம் அபராதத்துடன் ஆயுள் தண்டனையும், குற்றத்துக்கு உதவியதாக இருந்ததாக அவரின் தந்தைக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனையும் விதித்த நீதிபதி ரவிக்குமார் திவாகர், “இந்த வழக்கு சட்ட விரோத மதமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்காகப் பதிவு செய்யவில்லையென்றாலும் அதற்கு இதுவும் ஒரு உதாரணம். இஸ்லாமிய ஆண்கள், இஸ்லாமியர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த பெண்களைக் காதலிப்பது போல் நடித்து, திருமணம் செய்து கொண்டு அவர்களை இஸ்லாத்துக்கு மாற்றும் நடைமுறையே லவ் ஜிஹாத்.

இது அந்தக் குறிப்பிட்ட மதத்தின் சில தரப்பினரால், இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக நடத்தப்படும் மக்கள்தொகைப் போர் மற்றும் சர்வதேச சதி. பாகிஸ்தான், வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலையை இங்கும் உருவாக்க இத்தகைய சதி நடக்கிறது. இது சிலரால் செய்யப்பட்டாலும் முழு மதமும் இழிவுபடுத்தப்படுகிறது. அதேசமயம், லவ் ஜிஹாத்துக்குப் பெரும் பணம் தேவைப்படுகிறது. எனவே, இதில் வெளிநாட்டு நிதியுதவி இருக்கிறது என்ற உண்மையை நிராகரிக்க முடியாது.

நீதிபதி ரவிக்குமார் திவாகர்

பெரிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்த லவ் ஜிகாத் நடத்தப்படுகிறது. மத்திய அரசு இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு இது பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அரசு இதனைச் சரியான நேரத்தில் தடுக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும்” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். மேலும், தீர்ப்பின் நகலைத் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதே நீதிபதிதான், இந்தாண்டு தொடக்கத்தில், உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, ‘தத்துவங்களின் ராஜா’ (Philosopher King) எனப் புகழ்ந்திருந்தார். மேலும், 2022-ம் ஆண்டு ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs