Isha: கோவை ஈஷா யோகா மீதான வழக்கை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்! – காரணம் என்ன?

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முனைவர் காமராஜ் என்பவர், ஈஷா யோக மையத்தில் உள்ள தங்களது மகள்களை மீட்டுத்தரச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நாங்கள் யாருக்கும் ஆதரவோ, எதிர்ப்போ இல்லை. இருப்பினும் சில சந்தேகங்கள் உள்ளன. ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அதேநேரத்தில் மற்றவர்களை சன்னியாசத்துக்கு தூண்டுவது ஏன்?. ஈஷா மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன என்பதை ஆய்வு செய்து, வருகிற 6-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். இந்த வழக்கு 18-ம் தேதி விசாரணைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

இதையடுத்து கோவை சமூகநலப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், குழந்தைகள் நல அதிகாரிகள், காவல்துறை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இரண்டு நாள்கள் ஈஷா மையத்தில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஈஷா யோக மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், “ஈஷா யோகா மையம் எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தி தள்ளவோ செய்வதில்லை. ஈஷா யோகா மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் ஒரு சிலரின் இருப்பிடமாக இருக்கிறது.

சந்திரசூட்

2 பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்தும், உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தி தேவையில்லாத சச்சரவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மனுதாரர் வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை” எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஈஷா அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மிகையானது. தேவையற்றது. ஈஷா யோகா அறக்கட்டளை போன்ற ஒரு நிறுவனத்திற்குள் காவல்துறையையோ, இராணுவத்தையோ அனுமதிக்க முடியாது” எனக் கூறி, இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார். அதற்கு ஆதரவாக மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

ஈஷா யோகா மையம்

அதைத் தொடர்ந்து, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதி ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஸ்ரமத்தில் இருக்கும் இரண்டு பெண்களும் நீதிபதிகளுடன் வீடியோ வழியில் உரையாடினார். அதைத் தொடர்ந்து நீதிபதி சந்திரசூட், “இரண்டு பெண்களும் அவர்களின் முழு சம்மதத்துடன்தான் அங்கு தங்கிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். எனவே, எந்தவொரு முதன்மையான காரணமும் இல்லாமல், உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த உத்தரவை நிறுத்தி, விசாரணைக்கு தடை விதிக்கிறோம்.” என உத்தரவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group, இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…