தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளி பட்டினிச்சாவு – துயரமும் பின்னணியும்!

குறைந்த ஊதியத்துக்கு அதிகநேர வேலை, ஒரு சிறிய அறையே பத்துக்கும் மேற்பட்டோருக்கு தங்குமிடம், தரமற்ற உணவு, பாதுகாப்பற்ற வாழ்க்கை என்பதே தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் வேலைசெய்யும் பெரும்பாலான வட மாநிலத்தொழிலாளர்களின் இன்றைய நிலையாக இருக்கிறது. அதிலும், புதிதாக வேலைக்கு வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுவது, மொழிபுரியாமல் அவதிக்குள்ளாவது என அவர்கள்படும்பாடுகளும் ஏராளம்.

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்

அந்தவகையில்தான், கடந்த செப்டம்பர் மாதம் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து 10-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைதேடி சென்னைக்கு வந்திருக்கின்றனர். அவர்களிடம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் விவசாய வேலை இருப்பதாகக்கூறி அழைத்துச் சென்ற இடைத்தரகர் அவர்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.

ஆனால், சொல்லியபடி அங்கு வேலை இல்லாததால் பரிதவித்த தொழிலாளர்கள், பேருந்துக்கு டிக்கெட் எடுக்கக்கூட போதுமான பணமின்றி கால் நடையாகவே பொன்னேரியிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வரை நடந்து வந்திருக்கின்றனர். மொத்தமுள்ள 11 பேரில் ஒருவர்மட்டும் இருந்த பணத்தை வைத்து சொந்த ஊருக்குச் செல்ல மீதமுள்ள 10 பேரும் திரும்பிச் செல்ல வழியின்றி ரயில்நிலைய பிளாட்பாரத்திலேயே தங்கியிருந்திருக்கின்றனர். கையிலிருந்த சொற்ப பணத்தை வைத்து கொஞ்சம் அரிசியும் மீனும் வாங்கி சமைத்து நாட்களை கடத்தியிருக்கின்றனர். பின்னர், சாப்பிட எதுவுமில்லாமல் மூன்று நாட்களாக பட்டினி கிடந்தவர்களில், நான்குபேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 16-ம் தேதி ரயில்நிலைய பிளாட்பாரத்திலேயே சுருண்டு விழுந்திருக்கின்றனர்.

உயிரிழந்த வட மாநிலத் தொழிலாளி சமர்கான்

உடனே தகவலிறிந்து வந்த ரயில்வே போலீஸார், மயங்கிக் கிடந்த நான்கு பேரை மீட்டு ரயில்நிலையத்திலுள்ள அப்பல்லோ அவசர சிகிச்சை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்ட்ரல் எதிர்புறமுள்ள ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் மூன்று பேர் உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆன நிலையில், சமர்கான் (35)என்ற தொழிலாளி மட்டும் உடல் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்து கடந்த அக்டோபர் 1-ம் தேதி பரிதாபமாக உயிரிந்திருக்கிறார். இந்த சம்பவம் உடன்வந்த வடமாநிலத் தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், மொழி தெரியாததால் சமர்கானின் உடலை அவரின் சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல வழிதெரியாமலும், கையில் பணம் இல்லாததால் தாங்களும் ஊருக்கு செல்லமுடியாமல் மருத்துவமனை வளாகத்திலேயே செய்வதறியாது பரிதாபமாக நின்றிருக்கின்றனர்.

காவல்துறை

இந்த தகவல் தமிழ்நாடு தொழிலாளர்துறை அமைச்சர் சி.வெ. கணேசனுக்கு தெரியவர நேரடியாகவே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். உயிரிழந்த சமர்கானின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர், சமர்கானின் குடும்பத்துக்கு ரூ.60,000 தனது சொந்தப் பணத்தை நிவாரணமாக வழங்கினார்.

அதேசமயம், பாதிக்கப்பட்டவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் என்பதால் ஏற்கெனவே ஏழாண்டுகள் மேற்குவங்கத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி இஸ்ரேல் ஜெபசிங்கும் சம்பவ இடத்துக்கு வந்து, உடலை கொண்டுசெல்வதற்கான ஆம்புலன்ஸ் ஏற்பாடு, விமான டிக்கெட் ஏற்பாட்டையும் செய்துகொடுத்தார்.

அஞ்சலி செலுத்திய அமைச்சர்

அதன்பிறகு பேசிய இஸ்ரேல் ஜெபசிங், “மொழி புரியாத காரணத்தினால் உணவும், உதவியும் கிடைக்காமல் கேட்பாரற்று சென்ட்ரல் ரயில்வே பிளாட்பாரத்திலேயே கிடந்திருக்கிறார்கள் வடமாநிலத் தொழிலாளர்கள். கையிலிருந்த கொஞ்ச பணத்தை வைத்து அரிசி வாங்கி சமைத்து, அதை ஒரே தட்டில் பத்துபேரும் சாப்பிட்டிருக்கிறார்கள். அதில் மலிவு விலைக்கு மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக் கோளாறும் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் மூன்றுநாட்கள் பட்டினியுடன் உடல்நலமில்லாமல் இருந்து, மயங்கி விழுந்திருக்கின்றனர். அவர்களை மருத்துமனையில் சேர்த்தபிறகு, அவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தும் போய்விட்டார்.

இஸ்ரேல் ஜெபசிங், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி

மொழி புரியாமலேயேதான் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கவேண்டுமென்றால் தமிழ்நாடு அரசாங்கம் மட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட மேற்குவங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களும் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை முறைப்படி கணக்கெடுத்து பதிவுசெய்யவேண்டும். எதேனும் அவசரம் என்றால் தொடர்புகொள்வதற்கான அவசர எண்ணை அறிவிக்கவேண்டும்! ரேஷன் அரிசி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்!” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb