சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்குரிய தலங்களான தமிழ்நாட்டின் ஊட்டி, கொடைக்கானலுக்கு கடந்த மே மாதத்தில் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளின் வருகை இருந்தது. இந்த இரண்டு பகுதிகளிலும் ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் சென்றதால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேர்ந்தது.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதற்கு ஏற்ப வருங்காலங்களில் உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் இ- பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் கடந்த மே மாதம் முதல் இ- பாஸ் முறையில் ஆன்லைன் மூலம் அனுமதி பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியது. செப்டம்பர் வரை இ- பாஸ் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு, “கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாத இறுதி வரை இ – பாஸ் முறையில் நீலகிரிக்குள் 2 லட்சத்து 77 ஆயிரத்து 830 வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 13 லட்சத்து 12 ஆயிரத்து 800 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த இ-பாஸ் முறை தொடரும்” என்றார்.