`தலைவர்களை செயற்கையாக உருவாக்குவது நீடிக்காது’ – உதயநிதி குறித்து நத்தம் விசுவநாதன் கருத்து!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், “திமுக ஆட்சியில் சட்டவிரோத மணல் கடத்தல், கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள்தான் சாதனையாக உள்ளது. இது போன்ற மோசமான ஆட்சியை இதுவரை மக்கள் பார்த்ததில்லை, இனி, பார்க்க போவதுமில்லை.

அலங்காநல்லூர் கூட்டத்தில்

மக்களின் மறதியை மூலதனமாக வைத்து திமுக செய்யும் சட்ட விரோத செயல்களை மூடிமறைக்க முயற்சி செய்கிறார்கள், சட்டமன்றத்தில் திமுக அரசின் வேதனைகளை எடுத்துச் சொல்ல முயன்றால் சபாநாயகர் இடி அமீன் போல் செயல்பட்டு பேச அனுமதிக்க மறுக்கிறார், எதிர்க்கட்சிகள் குரல்வளை நசுக்கப்படுகிறது. அதனால்தான் இன்றைக்கு மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்லி வருகிறோம்.

அதிமுக-வின் தோல்வி என்பது நிரந்தரமல்ல, தற்காலிகம்தான். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். நாடாளுமன்றத் தேர்தல் பிரதமரை முன்வைத்து நடத்தப்பட்டது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று மக்கள் எண்ணி வருகிறார்கள், சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியாரா? ஸ்டாலினா? என்பதுதான் வரும். நிச்சயம் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார்.

ஆற்று மணலைக்கூட எண்ணிவிடலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமி செய்த சாதனைகளை எண்ணி விட முடியாது. கல்வித்துறை, நீர் மேலாண்மை, விவசாயத்துறை என சொல்லிக்கொண்டே போகலாம்.

நத்தம் விசுவநாதன்

முல்லைப்பெரியாறு பிரச்னையில் வரலாற்று தீர்ப்பை பெற்றுத் தந்தோம். ஆனால், நாம் பெற்ற தீர்ப்பை கூட நிறைவேற்ற முடியாத அரசாக திமுக அரசு உள்ளது. இன்றைக்கு கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளதால் அவர்கள் மனம்கோணாமலும், அதேபோல் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கும் சமாதானமாக நடந்து கொண்டு தமிழக நலனை விட்டுக் கொடுத்துவிட்டார் ஸ்டாலின்.

திராவிட மாடல் அரசு என்பது மக்களை ஏமாற்றும் அரசாகும், இன்றைக்கு முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்ததை சாதனையாக சொல்லி மிகைப்படுத்தி வருகிறார்கள். இதேபோல் ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் முதலீட்டை ஈர்த்து தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினர்.

திமுக அரசு திறமையற்ற அரசாக உள்ளது, கடனை குறைப்போம் என்று ஆட்சிக்கு வருமுன் கூறினர், ஆனால், இன்றைக்கு கடனை குறைக்கவில்லை. அதேபோல் வரியை உயர்த்த மாட்டோம் என்றார்கள், உயர்த்தி விட்டார்கள். ஏற்கெனவே வழங்கப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்துவிட்டனர்.

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கடன் சுமை ஐந்தரை லட்சம் கோடிதான் இருந்தது. அதில், ஏற்கெனவே திமுக ஆட்சியில் வாங்கியது ஒரு லட்சம் கோடி. நாங்கள் வாங்கிய கடன் அளவு நான்கரை லட்சம் கோடிதான். ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு வாங்கியுள்ள கடன் அளவு 3.70 லட்சம் கோடி. இரு மடங்கு கடன் சுமை அதிகரித்துவிட்டது.

அலங்காநல்லூர் கூட்டத்தில்

அதிமுக ஆட்சியிக் கடன் வாங்கி பல்வேறு திட்டங்களுக்கு முதலீடு செய்தோம். ஆனால், திமுக அரசு கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்து தவறான நிர்வாகத்தை நடத்துகிறது.

மக்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத அரசாக உள்ளது. ஏற்கெனவே மரக்காணத்தில் கள்ளச்சாராய விபத்து நடைபெற்றது, அதை சரி செய்திருந்தால் மீண்டும் விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் சம்பவம் நடைபெற்று இருக்காது. இன்றைக்கு மனித உயிர் மலிவு என்ற நிலையை உருவாக்கிவிட்டனர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.

உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியதற்கு மூத்த அமைச்சர்கள் எல்லாம் ஜால்ரா போடுகிறார்கள். திமுக அரசு மீதான எதிர்ப்பு அலையை தடுக்கத்தான் மக்களிடத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்த அமைச்சர்கள் அனைவரும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்று கூறினார்கள். உதயநிதியை துணை முதலமைச்சராக்கினால் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடவா போகிறது? பொதுவாக இயற்கையாக தலைவர்கள் உருவாக வேண்டும், போலியான, செயற்கையான தலைவரை தற்போது உருவாக்கி உள்ளார்கள். அது எப்போதும் நீடிக்காது” என்றார்.