“ரகுபதியே கூறி விட்டார்… இனி ஸ்டாலின் எங்கேயும் சுற்றுப்பயணம் செல்ல மாட்டார்” -ஹெச்.ராஜா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில், பா.ஜ.க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டதில் பங்கேற்க வந்த தமிழ்நாடு பா.ஜ.க பொறுப்பாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எப்படியாவது தமிழகத்தில், குறிப்பாக பெண் வாக்காளர்களை கருத்தில் கொண்டு, பிரச்னையை திசை திருப்பும் விதமாகவும் குற்றவாளிகளை காப்பாற்றும் விதமாகவும் ஒரு கட்சி தமிழ்நாட்டில் மாநாடு நடத்தியுள்ளது. அது மது ஒழிப்பு மாநாடா அல்லது மது ஊக்கவிப்பு மாநாடா என்பது தெரியவில்லை.

ஹெச்.ராஜா

இது மது ஒழிப்பு மாநாடா?

தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு மதுவை ஊக்குவிக்கும் அரசு, ஏனென்றால் 500 மதுபான கடைகளை மூடுவேன் என்று சொல்லிவிட்டு 1000 தனியார் கிளப்புக்கு அனுமதி அளித்துள்ளனர். அந்த கிளப்பில் 150 உறுப்பினர்கள் தான் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை. இந்த மது ஊக்குவிப்பு அரசாங்கம் அதன் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் என்றால் இது யாரை ஏமாற்றும் மாநாடு? இது மது ஒழிப்பு மாநாடா? இது மது உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், மது பிரியர்களுக்கான மாநாடு.

`திமுக கூறியிருப்பது வெட்ககேடான விஷயம்..’

மது மாநில கொள்கையில் மட்டும்தான் உள்ளது. அது மத்திய அரசு கொள்கை இல்லை. மதுக்கடைகளை திறப்பது திமுக அரசு. கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வெட்கமே இல்லாமல் இருந்துவிட்டு, இந்த ஆண்டு 1700 கோடி ரூபாய் மதுக்கடை மூலம் அதிக வருமானம் வந்துள்ளது என்று திமுக கூறியிருப்பது வெட்ககேடான விஷயம்.

மதுக்கடைகளை திறந்தவர்களே தான் மதுக்கடைகளை மூட வேண்டும் அல்லது திமுக அரசு மதுக்கடைகளை திறந்து விட்டு சாவிகளை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளதா? இது மாநில அரசின் கொள்கை. திறந்தவர்கள் தான் மூட வேண்டும். மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு. மக்களை ஏமாற்றுகிற மாநாடு.

தமிழ்நாடு அரசு

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம் தொடர்ந்து அந்த விதிமுறைகளை பின்பற்றலாம் என கூறியிருந்தும் இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரவில்லை. இதன் மூலம் நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுதான் திராவிட மாடல். இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் தமிழ்நாடு அரசை குட்டி, நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது.

கோயில் புனரமைப்பு பணி: வெள்ளை அறிக்கை வேண்டும்…

கோயில் கட்டுமானங்கள் தரமற்ற முறையில் உள்ளது. அதனால்தான் பழனி கோபுரத்தின் மேற்பகுதி சிதலமடைந்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத்துறை மூலம் புனரமைப்பு செய்யப்பட்ட கோயில்களை கள ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோயில் புனரமைப்பு பணிகளில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் ஊழல் நடந்துள்ளது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி சிறைக்குச் செல்வார் என்று ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அவர் கூறியிருந்தது போலவே செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றார். அதிலிருந்தாவது புரிந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்திருக்கக் கூடாது. தர்மம், நீதி, நியாயம், நீதிமன்றம் என்று எதையும் மதிக்காத தர்பார் ஆட்சி தற்போது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்

ஸ்டாலின் மூலவர், உதயநிதி உற்சவர்

கல்லூரிகளில் போலியான ஆதார் கார்டுகளை கொடுத்து ஒரே பேராசிரியர் பல்வேறு கல்லூரிகளில் முறைகேடாக பணியாற்றியது தெரியவந்துள்ளது. தற்போது பொன்முடி அந்தத் துறையின் அமைச்சராக இல்லாத சூழலில் முதலமைச்சர் முறையாக விசாரணை செய்து அது என்ன முறைகேடு நடந்தது என்று குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் கள ஆய்வு நடத்த வேண்டும்.

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 15 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அந்தக் கட்சியை கொண்டு சென்ற பாதையில் தற்போது அதிமுக கட்சி செல்கிறதா..? என்று அதிமுக தொண்டர்கள் நினைத்திருக்கலாம். அதனால், வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம். அந்த விவாதத்திற்குள் நாங்கள் செல்லவில்லை. எங்களுக்கு கிடைத்துள்ள 18 சதவிகித வாக்குகள் பிரதமர் மோடிக்காக கிடைத்த வாக்குகள்.

முதலமைச்சர் ஸ்டாலினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மூலவர் என கூறியது பற்றி கேட்கிறீர்கள். அவர் அப்படி சொல்லியுள்ளதால், இனிமேல் ஸ்டாலின் எங்கேயும் சுற்றுப்பயணம் செல்ல மாட்டார். ஏனென்றால், ஸ்டாலின் மூலவர், உதயநிதி உற்சவர் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதியே கூறி விட்டார்” என்றார்.