அக்டோபர் முதல் தேதியுடன் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 75-வது ஆண்டை சீனா நிறைவு செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரா நாடாக விளங்கும் சீனா, கொரோனாவுக்கு பிறகு கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
பல தசாப்தங்களாக கம்யூனிச ஆட்சியின் கீழ், வானளவு உயர்ந்த சீனாவின் பொருளாதாரம், அண்மைக் காலங்களில் பாதாளத்துக்கு செல்வதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறது. குறைந்த பொருளாதார வளர்ச்சி, ரியல் எஸ்டேட் பிரச்னை, அதிகரிக்கும் அரசாங்க கடன், வேலையின்மை, மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு என இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
சீனாவின் துவண்டுகொண்டிருக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு தங்களால் இயன்ற எல்லா முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது சீன அரசு. 2019-ல் சீனா கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-வது ஆண்டு விழாவின்போது, சீனா விரைவில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதல் பொருளாதார நாடாக மாறும் என்று நிபுணர்கள் ஆருடம் கூறினர். ஆனால், அதற்கான சமிஞ்கைகள் எதுவும் தென்படுவதுபோல தெரியவில்லை.
கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே பொருளாதார சிக்கலை சரிசெய்யும் நோக்கில் ஏராளமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் அதிபர் ஜி ஜின்பிங். இந்த கவலை தரும் சூழலுக்கு மத்தியில் சீன மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை இரண்டு விதமான ஆய்வுகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.
முதலாவது, சீன மக்கள் தங்களுடைய எதிர்கால வளர்ச்சி குறித்து மிகுந்த அவநம்பிக்கையில் இருக்கின்றனர். இரண்டாவது, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் போராட்டங்கள் ஆன்லைனிலும், சாலைகளிலும் அதிகரித்துள்ளன.
கொரோனாவுக்குப் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் அமல்படுத்தப்பட்ட மூன்று மிகப் பெரிய ஊரடங்குகள் சீனாவின் பொருளாதார நடவடிக்கைகளை முற்றிலுமாக முடக்கிப் போட்டது. எதிர்காலம் குறித்த சீன மக்களின் மனநிலையை பற்றிய ஆய்வு 2004 முதல் 2009 மற்றும் 2014 முதல் 2023 வரை ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
அந்த ஆய்வின் முடிவில், 2004-ஆம் ஆண்டு பங்கேற்றவர்களில் 60 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டுகளில் தங்களுடைய பொருளாதாரம் மிகவும் மேம்பட்டிருப்பதாகவும், அடுத்த 5 ஆண்டுகள் மிகவும் நம்பிக்கை அளிப்பவையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அதேபோல 2014 முதல் 2019 வரையிலான ஆய்வில் பங்கேற்றவர்களில் 75% சதவீதம் பேர் நேர்மறையான நம்பிக்கையை கொண்டிருந்தனர். ஆனால், 2023-ஆம் ஆண்டு வெறும் 38.8 சதவீதம் சீனர்கள் மட்டுமே தங்களுடைய வாழ்க்கை மேம்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், 47 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கைத் தரம் முன்னேறும் என்று நம்புகின்றனர். இன்னொருபுறம் தங்களுடைய எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையை கொண்டிருந்தவர்கள் 2004-ஆம் ஆண்டு வெறும் 2.3 சதவீதமாகவும், 2023-ஆம் ஆண்டு 16 சதவீதமாகவும் உள்ளனர்.
26 மாகாணங்களில் 20 முதல் 60 வயதுக்கு உட்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம் சீன மக்களின் தற்போதைய மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை ஓரளவு யூகித்துக் கொள்ள முடிகிறது.
கடும் அதிருப்தியில் சீன இளைஞர்கள்
சீன இளைஞர்களின் அதிருப்திக்கு மிகப் பெரிய காரணமாக வேலையின்மை இருக்கிறது. பட்டப்படிப்பை முடித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் மிகவும் குறைந்த ஊதியம் கொண்ட வேலைகளுக்கு செல்கின்றனர். இன்னும் சிலரோ “முழு நேரக் குழந்தைகளாக” (Full-time children) இருக்க முடிவு செய்கின்றனர். அதாவது, எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே தங்கள் பெற்றோருக்கு தேவையான வேலைகளை குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு செய்வது.
மக்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை சிதைத்ததில் கோவிட் ஊரடங்கு காலகட்டத்தில் அரசாங்கத்தின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளுக்கு பெரும் பங்கு இருப்பதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
2009 முதல் 2014 வரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் கலந்துகொண்ட 10-ல் ஆறு பங்கேற்பாளர்கள் ‘சீனாவில் உழைப்புக்கு எப்போதும் அங்கீகாரம் உண்டு’ என்று நம்பினர். ஆனால், 2023-ல் வெறும் 28.3 சதவீதம் பேர் மட்டுமே அதனை நம்புகின்றனர். இந்த நம்பிக்கை குறிப்பாக குறைந்த ஊதியம் பெறும் கீழ் நடுத்தரவர்க்க மக்களிடம் அதிகமாக இருப்பதாக தெரிகிறது.
படித்தால் நல்ல வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை போய், அரசியல் ரீதியான தொடர்புகளும், குடும்ப பாரம்பரியமும் மட்டுமே நல்ல எதிர்காலத்தை தரும் என்ற நம்பிக்கை பெரும்பாலான சீனர்களின் மனதில் குடிகொண்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதிகரிக்கும் மக்கள் போராட்டங்கள்
இன்னொருபுறம் சீனாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 2024 இரண்டாம் காலாண்டில் 18% சதவீதம் அதிகரித்துள்ளன. இந்தப் போராட்டங்களில் நான்கில் மூன்று, பொருளாதார பிரச்னைகள் அடிப்படையிலானவை. கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் இதுவரை 6,400 போராட்டங்கள் சீனாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
75 ஆண்டு காலமாக உள்நாட்டு வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்த சீனாவுக்கு இது ஒரு தீவிரமான பிரச்னையாக கருதப்படுகிறது. 60-வது மற்றும் 70-வது ஆண்டு விழாக்களைப் போல பிரமாண்ட பேரணிகள், வானவேடிக்கைகளை இந்த முறை சீன அரசு நிகழ்த்தவில்லை. மாறாக, தனது உரையில் கடினமான காலகட்டத்துக்கு தயாராகுமாறு சீன மக்களை வலியுறுத்தியுள்ளார் அதிபர் ஜி ஜின்பிங்.
“நமக்கு எதிரே உள்ள சாலை மென்மையாகவும் தட்டையாகவும் இல்லை. கடினங்களும், தடைகளும் அங்கே இருக்கப் போகின்றன. கடுமையான காற்றையும், கொந்தளிக்கும் கடல்களையும் நாம் எதிர்கொள்ளப் போகிறோம்” என்று ஜின்பிங் தனது உரையில் கூறியுள்ளார்.
சீன அதிபரின் இந்த வார்த்தைகளில் வெளிப்படும் கவலை, அந்த நாட்டு பொருளாதார சிக்கல்களின் தீவிரத்தை உணர்த்துகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb