விசிக மாநாடு: 40 ஏக்கர்; 50,000 இருக்கைகள்; பிரமாண்ட மேடை; பிரமிக்கவைக்கும் ஏற்பாடுகள்

மது மற்றும் போதை ஒழிப்புக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மதுமற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்துார் பேட்டையில் இன்று நடக்கிறது.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்துார்பேட்டையில் இந்த மாநாட்டிற்காக நாற்பது ஏக்கர் வரை இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த மாநாட்டை வடிவமைத்து, முழுமையாக நடத்தி முடிக்கும் பணியை வி.சி.க-விற்காக வாய்ஸ் ஆஃப் காமென் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

விசிக மாநாடு

கடந்த ஜனவரி மாதம் திருச்சியில் ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டையும் இந்த நிறுவனம் தான் பிரமாண்டமாக நடத்தி முடித்தது. இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ள ஆதவ் அர்ஜூனா தற்போது வி.சி.க-வின் துணைப்பொதுச்செயலாளராக இருப்பதால் மாநாட்டுப் பணிகளை நேரடியாக அவரே கண்காணித்து வருகிறார். சுமார் ஐம்பதாயிரத்திற்கு அதிகமாக சேர்கள் போடப்பட்டுள்ளது. எட்டு அடி உயரத்தில், தொலைவில் உள்ளவர்களும் காணும்வகையில் மாநாட்டு மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் முகமாக புத்தரின் உருவம் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு, மாநாட்டுப் பந்தலின் பக்கவாட்டில் அம்பேத்கர், பெரியார், காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு ஐம்பது அடியில் பிரமாண்ட் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தலைவர்கள் தவிர, மது ஒழிப்பிற்காக குரல் கொடுத்த தலைவர்களின் கட் அவுட்கள் மாநாட்டு நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது.

விசிக மாநாடு

குடியால் குடும்பங்களை இழந்த பெண்களின் குரல்களை வார்த்தைகளாக பதிவு செய்து, மாநாட்டு நுழைவு வாயிலில் பதாகைகளாக வைத்திருப்பதும், மாநாட்டு திடலின் இருபுறமும், மது மற்றும் போதை பயன்பாட்டுக்கு எதிராக தலைவர்கள் பலரும் குறிப்பிட்ட கருத்துக்களை பதாகைகளாக வைத்திருக்கிறார்கள். மேலும் மதுஒழிப்புக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தையும் இந்த மாநாட்டில் விசிக துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த மாநாட்டில் ஒரு லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த பிரமாண்ட இடம், மாநாட்டுத் திடலை ஒட்டியே கழிவரை வசதிகள், தூரத்தில் இருப்பவர்களும் மாநாட்டு நிகழ்வை காண பிரமாண்ட எல்.இ.டி திரைகள் என நவீனத்துடன் அனைத்தையும் உள்ளடக்கி மாநாட்டு மேடையை வடிவமைத்திருக்கிறது வாய்ஸ் ஆஃப் காமென் நிறுவனம். அதிகளவில் பெண்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறது அரசு தரப்பு.