VCK : `இத்தகைய சமூக அவலம் இனியும் தொடரக் கூடாது’ – விசிக மது ஒழிப்பு மாநாட்டில் துரை.ரவிக்குமார்

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கியது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் சிக்கல்களை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என அறிவித்தது.

திருமாவளவன்

இந்த அறிவிப்புக்குப் பிறகு பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறின. அதையும் கடந்து இன்று கள்ளக்குறிச்சியில் மாநாடு நடந்துவருகிறது. இந்த மாநாட்டில் உரையாற்றிய விசிக பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான துரை.ரவிக்குமார், “மது ஒழிப்பு என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் முதன்முதலில் கண்டுபிடித்ததல்ல… திருவள்ளுவர் திருக்குறளில் இது குறித்து ஒரு அதிகாரத்தையே எழுதியிருக்கிறார். அப்போதே இது பெரும் சிக்கலாக இருந்திருக்கிறது.

சனாதன எதிர்ப்பு என்பதை பலரும் பேசினார்கள். ஆனால், திருமாவளவன் ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என அதைக் கையில் எடுத்தபோது, அது தேர்தலிலும் முக்கிய விவாதமாக மாறியது. பவளவிழா காணும் தி.மு.க இந்தியாவிலேயே மாநில சுயாட்சி பற்றி முதன் முதலாக பேசியது. அதைத் தொடர்ந்து வி.சி.க ‘மாநில சுயாட்சி மாநாடு’ நடத்தியது. அது இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அதுபோலதான் மது ஒழிப்பு மாநாடும். காங்கிரஸ், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா எனப் பலரும் மது ஒழிப்புக்கு ஆதரவாக இருந்தார்கள்.

விசிக மது ஒழிப்பு மாநாடு

கலைஞர் 1971-ம் ஆண்டு மதுக்கடைகளை திறந்தாலும் 1974-ம் ஆண்டு முழு மதுவிலக்கை அமல்படுத்தினார். தமிழ்நாடு ஐ.நா-வின் 13 குறியீடுகளில் முதலிடத்தில் இருக்கிறது. அதேநேரம் தமிழ்நாட்டில் மது அருந்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் மது அருந்துவோர் 22 சதவிகிதம் என்றால், தமிழ்நாட்டில் 32 சதவிகிதம். 2011-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இந்தியாவில் 6.04 சதவிகித விதவைகள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அது, 9.7 சதவிகிதமாக இருக்கிறது. இந்த விதவைகளில் பாதிக்குப் பாதி விதவைகள் மது அருந்தியவர்களின் மனைவிகள்.

இத்தகைய சமூக அவலம் இனியும் தொடரக் கூடாது. மது ஒழிப்பு என்பது மாநில அரசின் கடமை மட்டுமல்ல, ஒன்றிய அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும் என அனைத்து தரப்பு அமைப்புகளுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு 1902-ம் ஆண்டு மது ஒழிப்புக்கு சங்கம் அமைத்திருக்கிறது இந்த ஒடுக்கப்பட்ட சமூகம். எனவே, அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. மக்களும் இதில் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.