VCK: `தமிழ்நாட்டில் வன்னியர் சமூகமும், தலித் சமூகமும்தான் குடிக்கு அடிமையாக இருக்கிறார்கள்’ – முத்துலட்சுமி | Live

`தமிழ்நாட்டில் வன்னியர் சமூகமும், தலித் சமூகமும்தான் குடிக்கு அடிமையாக இருக்கிறார்கள்’ – முத்துலட்சுமி

விசிக மது ஒழிப்பு மாநாட்டில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன் பேசியபோது, “என் கணவர் காட்டில் இருந்தாலும்கூட மது, சிகரெட், போதை என எந்தக் கெட்டப் பழக்கத்துக்கும் அடிமையாகாமல் இருந்ததால்தான் 36 வருடங்கள் காட்டில் காவல்துறையின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருந்தார்.

முத்துலட்சுமி வீரப்பன்

மது குடிப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் அதன் தயாரிப்பை நிறுத்துவார்கள். பல தலைவர்கள் மதுவை எதிர்த்துப் போராடினார்கள். ஆனால் இன்றுவரை அது நடக்கவில்லை. தமிழ்நாட்டில் வன்னியர் சமூகமும், தலித் சமூகமும்தான் குடிக்கு அடிமையாக இருக்கிறார்கள்.” எனக் குறிப்பிட்டார்.

விசிக மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு! Live

மாநாடு மேடைக்கு வந்த திருமாவளவன்!

விசிக மாநாட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்களின் சுருக்கம்!

கள்ளக்குறிச்சியில் நடந்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்களின் சுருக்கம்:

அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47-ல் கூறியுள்ளவாறு மது விலக்கை தேசியக் கொள்கையாக அறிவிப்புச் செய்திடுக.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்கிடுக.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு அளித்திடுக.

மதுவிலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திடுக!

மதுக்கடைகளை முற்றிலுமாக மூடுவதற்கான கால அட்டவணையை அறிவித்திடுக!

போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுத்திடுக!

மது – போதைப் பொருள்கள் ஒழிப்பு பரப்புரையில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்துக.

குடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனிப் பிரிவுகளை ஏற்படுத்துக!

மது – போதை அடிமைகளுக்கு மறுவாழ்வளிக்க மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திடுக.

டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கிடுக.

மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக.

மதுவிலக்கு பரப்புரையில் அனைத்துத் தரப்பினரும் இணைய வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு தொடங்கியது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இன்று மாலை 3 மணியளவில் உளுந்தூர் பேட்டையில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்துகிறது .

`அதிமுக’ விற்கு அழைப்பு, அதிகாரப் பகிர்வு, திமுக கூட்டணி சர்ச்சை எனப் பல விவகாரங்கள் பேசுபொருளாகிவுள்ள நிலையில், இம்மாநாடானது தமிழ்நாட்டு அரசியலில் உற்று கவனிக்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது. திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சியினர், வைகுண்டர் இயக்கத்தின் தலைவர் பால.பிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டு அரசியலில் சூடுபிடித்திருக்கும் திமுக கூட்டணி விவகாரம் குறித்தும் கூட்டணி கட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறித்தும் திருமாவளவன் என்ன பேசப்போகிறார்… இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள பிற அரசியல் கட்சி தலைவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்பது கவனத்திற்குரியதாக இருக்கிறது.

இம்மாநாடு கூட்டணி விவகாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? ‘மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு’ குறித்த முக்கியத் தீர்மானங்கள் இதில் எடுக்கப்படுமா? மேலும், இம்மாநாடு தமிழ்நாடு அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் மாநாடாக அமையுமா என்பதைப் பார்ப்போம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs