`மு.க.ஸ்டாலின் சொந்தக் காசில் சூனியம் வைத்துள்ளார்’ – கடம்பூர் ராஜூ விமர்சனம்

“செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியும், உதயநிதியை துணை முதலமைச்சராக்கியும் சொந்தக் காசில் சூனியம் வைத்துள்ளார் ஸ்டாலின்” என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.

பேரையூர் கூட்டத்தில்

மதுரை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரையூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, “இந்த திருமங்கலம் தொகுதி பல அமைச்சர்களை உருவாக்கிய தொகுதியாகும்.

1977ஆம் ஆண்டு எம்ஜிஆர்  பதவியேற்றபோது, இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பி.டி சரஸ்வதியை அமைச்சராக்கினார். அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற காளிமுத்து சட்டமன்ற பேரவை தலைவரானார். அதனைத் தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் வெற்றிபெற்று அமைச்சரானார்.

இன்றைக்கு ஸ்டாலின், செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியும், உதயநிதியை துணை முதலமைச்சராக்கியும் சொந்தக் காசில் சூனியம் வைத்துள்ளார். இவர்கள் இன்று புள்ளி வைத்துள்ளனர், அது கோலமாகி விரைவில் அலங்கோலமாகும்.

கடம்பூர் ராஜூ

சட்டமன்றத்தில் அமைச்சர்கள் நுழையும்பொழுது சக அமைச்சர்கள் வணக்கம் தெரிவிப்பார்கள். ஆனால், தற்பொழுது சட்டமன்றத்தில் உதயநிதிக்கு திமுகவின் மூத்த அமைச்சர்களே எழந்து நிற்கும் அவல நிலை உள்ளது. ஆனால், துரைமுருகன் மட்டும் வேறு வழியில்லாமல் முகத்தை திருப்பிக்கொண்டு விடுவார்.

கடந்த 10 ஆண்டுகளில் நாம் மகத்தான சாதனைகளை செய்தோம். மாதம்தோறும் 20 கிலோ அரிசி திட்டம், கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், மடிக்கணினித் திட்டம், உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனத் திட்டம், தாலிக்கு 1 பவுன் தங்கம் வழங்கினோம்.

இவைகளையெல்லாம் நீங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். நமது ஒரே லட்சியம் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும்” என்றார்.