ஏவுகணை தாக்குதல்… பேஜர், வாக்கி டாக்கி மற்றும் சோலார் தகடுகள் வெடிப்புகள்… ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டது ஆகிய லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தொடங்கியது. இந்தப் போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்களை நடத்த தொடங்கிய போதுதான் ‘இஸ்ரேல் – லெபனான்’ போர் ஆரம்பமானது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்த, இஸ்ரேலும் லெபனானின் மீது பதிலடி தாக்குதல்களை நடத்தியது.
இந்த இரு தரப்பு தாக்குதல்களும் கடந்த சில தினங்களாக மிகவும் மோசமடைந்துள்ளது. லெபனானில் நடந்த பேஜர், வாக்கி டாக்கி, சோலார் தகடுகள் வெடிப்பிற்கு பின்னால் தாங்கள் இருப்பதாக இஸ்ரேல் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், இஸ்ரேல்தான் தாக்குதலை நடத்தியது என ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் உள்ளிட்ட அந்த அமைப்பினர் அனைவரும் கூறினர்.
இதன் பின்னர், ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் தாக்குதல் மூலம் கொன்றது. இந்த நிலையில், தற்போது லெபனான் மீது தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.
இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய இடங்கள் மற்றும் சுரங்கங்கள் குறி வைக்கப்பட்டுள்ளது என்ற இஸ்ரேல் பாதுகாப்பு துறை கூறி தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
ஆனால் இந்தத் தாக்குதல்களை நிறுத்துமாறு உலக நாடுகள் இஸ்ரேல் மற்றும் லெபனானை வலியுறுத்தி வருகின்றன.