செந்தில் பாலாஜிக்கு இது தற்காலிக ‘ரிலீஃப்’ தானா?’ – அதிரடி காட்டும் வழக்குகளின் அடுத்தகட்ட நகர்வுகள்

சட்டவிரோத பணச் சலவைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 471 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு செப்டம்பர் 26-ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். சிறையிலிருந்து வெளியில் வந்த நாள் முதல் இன்று வரை அவருக்குத் தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

“திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், மாதத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” என்ற நிபந்தனைகளையும் விதித்தது உச்ச நீதிமன்றம்.  இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த இரண்டே நாள்களில் மீண்டும் அமைச்சராகியிருக்கிறார் செந்தில் பாலாஜி. அதுவும் அவர் முன்பு வகித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையையே அவரிடம் மீண்டும் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, செந்தில் பாலாஜியின் ஜாமீன் குறித்து மறுபரிசீலனை செய்ய மனு ஒன்றையும் தாக்கல் செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால், செந்தில் பாலாஜிக்குக் கிடைத்துள்ள ரிலீஃப் தற்காலிகமானதுதானா என்கிற கேள்வி எழுகிறது. வழக்கின் தன்மை எப்படிச் செல்கிறது என்ற விசாரணையில் இறங்கினோம்.

செப்டம்பர் 30ம் தேதி செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை ஓராண்டுக்குள் முடிக்க உத்தரவிடக் கோரிய மனு, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி அபெய் ஓகா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. எனவே சாட்சியை கலைக்கமாட்டார் என்று தான் உச்ச நீதிமன்றம்  ஜாமீன் வழங்கியிருக்கிறது. ஆனால் தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராகிவிட்டார். எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதி, “செந்தில் பாலாஜி ஜாமீனை மறு பரிசீலனை செய்வதற்கு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுங்கள்” என மனுதாரருக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதனால், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

15 மாதங்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, அவர் அமைச்சராகி உள்ள நிலையில், இப்போது அமைச்சர் பதவியை ஏற்றதாலேயே அவரது ஜாமீனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமைச்சரவையில் இல்லை. அதனால் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சியங்களைக் கலைக்க மாட்டார் எனவும், நீண்ட நாள் சிறையில் இருந்ததாலுமே அவருக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த விவகாரத்தில் தி.மு.க தலைமை அவசரப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது. நிபந்தனைகளை நீக்கச் சொல்லி நீதிமன்றத்துக்குச் சென்றபோது அமைச்சராகியிருப்பது குறித்து கேள்வி நிச்சயம் எழும்.

செந்தில் பாலாஜி – உச்ச நீதிமன்றம்

எனவே, மீண்டும் அமைச்சரவையிலிருந்து நீக்கும் அளவுக்கோ நிபந்தனைகளை இன்னும் கடுமையாக்கும் இடத்துக்கோ இந்த வழக்கு செல்லலாம் என்கிறார்கள். தி.மு.க-வில் இருக்கும் சட்ட வல்லுநர்கள் இது குறித்து  தலைமைக்குச் சொன்னார்களா சொல்லவில்லையா அல்லது அவர்கள் சொல்லியும் தலைமை கேட்கவில்லையா எனத் தெரியவில்லை.

ஒருபக்கம், சிறப்பு நீதிபதி நியமிக்கப்பட்டால் வழக்கு விசாரணை வேகம் பெறும், மறுபக்கம், ஜாமீனை மறு பரிசீலனை செய்ய மனுத்தாக்கல் செய்யப்பட்டால் மீண்டும் அமைச்சரானது குறித்த கேள்வியை எதிர்கொள்ள நேரிடும். மீண்டும் அமைச்சராக நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை என்றாலும், அவர் அமைச்சராக இல்லாததும் ஜாமீன் கிடைக்க ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் செந்தில் பாலாஜிக்கு அடுத்து வரும் நாள்கள் சிக்கலாகவே தொடரும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs