கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காசாவில் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீன போர் அடுத்தக் கட்டத்தை எட்டி, லெபனானை மையம் கொண்டு இஸ்ரேல் – ஹிஸ்புல்லா அமைப்பினருக்கிடையேயானப் போராக மாறியிருக்கிறது.
இந்தப் போர் கடந்த சில தினங்களாக தீவிரமடைந்து லெபனானில் நடந்த பேஜர், வாக்கி டாக்கி, சோலார் தகடுகள் வெடிப்பு போன்ற சம்பவங்கள் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பதாகக் கூறி, ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியது. இதற்குப் பழி தீர்க்கும் விதமாக இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திக் கொன்றது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக லெபனான் மீது சரமாரியாகத் தரைவழி தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்.
இத்தகையப் போர் சூழலில் இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுக்க ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது. இதையறிந்த அமெரிக்கா, ‛‛அடுத்த 12 மணிநேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தும். இதற்கு முழுவீச்சில் ஈரான் தயாராகி வருகிறது. ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தும் பட்சத்தில் அமெரிக்கா, இஸ்ரேலை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும்” என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில் ஈரான் 181 கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியிருக்கிறது.
இந்த இரவு நேர தீடீர் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார். மேலும், இது ஈரான் செய்த மிகப்பெரிய தவறு என்றும் இதற்கான பதிலடியை இஸ்ரேல் கொடுத்தே தீரும் என்றும் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். இதனால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை நடத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது மிகப்பெரிய போர் அறைகூவலாக மாறியுள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.