ரூபாய் நோட்டிற்குள் காந்தி எப்படி, எப்போது வந்தார் தெரியுமா? – வரலாறும், பின்னணியும் !

 இந்திய ரூபாய் நோட்டுகள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதே சமயம் நீண்ட காலமாக அதில் மாறாத ஒரே விஷயம், மகாத்மா காந்தி. `இந்திய சுதந்திரத்திற்கு காந்தியைத் தவிர வேறு யாருமே போராடவில்லையா ?’ என்ற கேள்விகளையும், `ரூபாய் நோட்டுகளில் இந்து சமய கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும்’ போன்ற கோரிக்கைகளையும் தாண்டி, ரூபாய் நோட்டுகளில் சிரித்துக் கொண்டிருக்கிறார் காந்தி.

ஆறாம் ஜார்ஜ் படத்துடன் வெளியான ரூபாய் நோட்டு

இந்தியாவில் 1882-ல் தான் முதல் முறையாக, காகித ரூபாய் நோட்டுகளை புழக்கத்துக்கு கொண்டு வந்தனர் பிரிட்டிஷார். அப்போது தொடங்கி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், அந்த ரூபாய் நோட்டுகளில் பிரிட்டிஷின் ஆறாம் ஜார்ஜ் மன்னர் ஆல்பர்ட் ஃபிரெட்ரிக் ஆர்தரின் படம்தான் இடம்பெற்றது.

அதன்பிறகு 1949-ல் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியில் இறங்கிய இந்திய அரசு, அந்த ஆண்டு வெளியிட்ட ஒரு ரூபாய் நோட்டில், சாரநாத்தில் இருக்கும் அசோகர் தூணின் படத்தை முதல் முதலில் வைத்தது. 1950-ல் சுதந்திர இந்தியாவின் ரூபாய் நோட்டுகளை, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 போன்ற மதிப்பீட்டில் வெளியிட்டது இந்திய அரசு.

காந்தி படம் இடம்பெற்ற முதல் ரூபாய் நோட்டு

அதையடுத்து 1954-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 1,000 ரூபாய் நோட்டில் தஞ்சை பெரிய கோயிலையும், 5,000 ரூபாய் நோட்டில் டெல்லியில் இருக்கும் இந்தியா கேட் (Gateway of India) படத்தையும், 10,000 ரூபாய் நோட்டில் நான்கு முக சிங்கத்தூணும் இடம்பெற்றன. அதற்கடுத்து ஆரியப்பட்டா செயற்கைக்கோள், டிராக்டர், ஹிராகுட் அணை, தேயிலை பறிப்பது, கோனார்க் சூரிய கோயில் சக்கரம், புலி, மயில் போன்ற பல விஷயங்கள், இந்திய அரசு வெளியிட்ட ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றன.

மகாத்மா காந்தியின் நூற்றாண்டையொட்டி (1869-1969) 1969-ம் ஆண்டு இந்திய அரசால் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டில்தான், காந்தியின் படம் முதல் முதலில் இடம்பெற்றது. அதில் சேவாகிராம் ஆசிரமத்தில் காந்தி அமர்ந்திருக்கும் படம் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக வேளாண்மை மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் தொடர்பான படங்கள் இடம்பெற்றன. அதன் பிறகு 1987-ல் வெளியிடப்பட்ட 500 ரூபாய் நோட்டில்தான், தற்போது இருக்கும் காந்தி சிரித்துக் கொண்டிருக்கும் படமும், அவரின் தண்டி யாத்திரையும் முதன் முதலாக இடம்பெற்றது.

ப்ரெடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸ் பிரபுவுடன் காந்தி

அதன் பிறகு வெளியான ரூபாய் நோட்டுகளில், இந்தியாவின் பல்வேறு முக்கிய அம்சங்களின் படங்கள் இடம்பெற்றன. 1996-ல் ஆண்டு முதல் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும், சிரித்துக் கொண்டிருக்கும் காந்தியின் படம் நிரந்தரமாக இடம்பெற்றுவிட்டது.

காந்தி சிரித்துக் கொண்டிருக்கும் அந்தப் படம், 1946-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசியல்வாதிகளில் ஒருவரான ப்ரெடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸ் பிரபுவின் அருகில் நின்று கொண்டு, காந்தி வேறு யாரிடமோ பேசும்போது எடுக்கப்பட்டது. அந்த படத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காந்திதான் தற்போது வரை ரூபாய் நோட்டுகளில் சிரித்துக் கொண்டிருக்கிறார். 1954-ம் ஆண்டு ரூ.1,000, ரூ.5,000 மற்றும் ரூ.10,000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனால் தற்போது இருப்பதைப் போலவே அப்போதும் வரி ஏய்ப்புகளும், பணப் பதுக்கல்களும் ஏற்பட்டது. அதனால் 1976-ம் ஆண்டு அவற்றை புழக்கத்தில் இருந்து நீக்கியது இந்திய அரசு.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் – ஒரு லட்சம் ரூபாய் நோட்டு

அதேபோல இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, இந்திய ராணுவத்துக்காக உலகெங்கும் இருக்கும் இந்தியர்கள் அனுப்பும் பணத்தை கையாள்வதற்காக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது. அதற்காக அவர் மியான்மர், அதாவது அப்போதைய பர்மாவில் `பாங்க் ஆஃப் இண்டிபெண்டண்ட்ஸ்’ என்ற வங்கியை தொடங்கினார். அந்த வங்கியால் வெளியிடப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் நோட்டின் ஒருபுறம் நேதாஜியின் புகைப்படமும், பிரிக்கப்படாத இந்தியாவின் புகைப்படமும் இடம்பெற்றது.