ஒன் பை டூ

பழ.செல்வகுமார்

பழ.செல்வகுமார், மாநில துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க

“மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் உமிழ்ந்திருக்கிறார் ஜெயக்குமார். பாசிச பா.ஜ.க அரசின் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சிறையில் வைக்கப்படடிருந்த செந்தில் பாலாஜி வெளியே வந்திருப்பதால், அவரை முதல்வர் வரவேற்றுப் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவர் வெறும் விசாரணைக் கைதி மட்டுமே. அவர்மீதான குற்றச்சாட்டு இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஆனால், ‘ஜெயலலிதா குற்றவாளி’ என நீதிமன்றம் அறிவித்தபோது, கல்லூரி மாணவிகளைப் பேருந்தோடு சேர்த்து உயிருடன் எரித்துக் கொலைசெய்தவர்கள் அ.தி.மு.க-வினர். மேலும், ஊழல் குற்றம் நிரூபணமாகி அந்த அம்மையார் தண்டனைக் கைதியாகச் சிறைக்குச் சென்றபோது, பேருந்து உடைப்பு, கடை அடைப்பு என்று மாநிலத்தையே போர்க்களமாக மாற்றினார்கள் ஜெயக்குமார் உள்ளிட்ட ரத்தத்தின் ரத்தங்கள். இடையில் ஒரு முறை அந்த அம்மையார் விடுதலையானபோது, பெங்களூரிலிருந்து சென்னை வரை பூத்தூவி வரவேற்ற அடிமைகளெல்லாம் தி.மு.க-வை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. கூடிய விரைவிலேயே செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என்பதை நிரூபித்து, முழு விடுதலை பெறுவார். அதேநேரத்தில் முன்னர் செய்த ஊழல்களுக்காக இனி அ.தி.மு.க-வினர் பலரும் அடுத்தடுத்து சிறைக்குச் செல்லப்போவதை நாம் பார்க்கத்தான் போகிறோம்!”

செ.கிருஷ்ணமுரளி

செ.கிருஷ்ணமுரளி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

“அண்ணன் ஜெயக்குமார் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனெனில், ‘செந்தில் பாலாஜியும், அவருடைய தம்பியும் ஊழல், லஞ்சம், ஆள்கடத்தல், நில அபகரிப்பு என கரூரைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். பினாமிகளை வைத்து தொழில் செய்கிறார்கள். பலரையும் மிரட்டி, சொத்துகளைப் பிடுங்கியிருக்கிறார்கள். பேருந்துகள் வாங்கியதில் ஊழல் செய்திருக்கிறார். போக்குவரத்துத்துறையில் நடத்துனர் பணியிடங்களுக்கு லஞ்சம் பெற்று பலரையும் ஏமாற்றியிருக்கிறார்’ என்று நாங்கள் சொல்லவில்லை… இன்றைய முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின்தான் சொன்னார். இன்று அவரே, ‘முன்னிலும் உரம் பெற்றவராகச் சிறையிலிருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது!’ என்று வரவேற்றிருக்கிறார். செந்தில் பாலாஜி தவறு செய்தார் என்பது தெரிந்ததும், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கியவர் அம்மா. ஆனால், ஊழல்வாதிகளை அமைச்சராக்கி அழகு பார்ப்பதுடன், அவர்களைப் பாதுகாக்கவும் துடிக்கிறார் ஸ்டாலின். ‘அ.தி.மு.க-வின் ஊழல்களை நிரூபிப்போம்’ என்று சொன்ன தி.மு.க-வின் அமைச்சரவையில் இருப்பவர்கள்தான் ஒருவர் மாற்றி ஒருவர் சிறைக்குச் செல்கிறார்கள். இதிலிருந்தே ஊழல் கட்சி எது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்!”