China: ‘கோடியில் ஒரு தாய்’ – இரட்டை கருப்பையுடன் ஆண், பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்!

வடமேற்கு சீனாவில் வசிக்கும் ஒரு பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று சர்வதேச செய்தியாகியிருக்கிறார். மிக மிக அரிதான இரட்டைக் கருப்பையுடன் ஒரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றுள்ளதுதான் செய்தி.

கருப்பை டிடெல்ஃபிஸ் (uterus didelphys) எனப்படும் இந்த நிலை உலகம் முழுவதும் உள்ள மக்களில் 0.3% பேருக்குத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஷான்சி மாகாணத்தில் வசிக்கும் லீ, செப்டம்பர் தொடக்கத்தில் எட்டரை மாத கர்ப்பிணியாக இருந்தபோதே இரண்டு குழந்தைகளைப் பெற்றுள்ளார்.

ஆண் குழந்தை 3.3 கிலோ எடையுடனும் பெண் குழந்தை 2.4 கிலோ எடையுடனும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவிக்கிறது சௌத் சைனா மார்னிங் போஸ்ட் வலைதளம்.

pregnancy

மகப்பேறு மருத்துவர் காய் யீங், “இது மில்லியனில் ஒரு நிகழ்வு” எனக் கூறியிருக்கிறார். மேலும் இயற்கையாக இரண்டு கருப்பைகள் உருவாகி, இரண்டிலிருந்தும் குழந்தைப் பிறக்கும் சம்பவங்களை உலகம் முழுவதும் அவர் 2 முறைதான் பார்த்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

லீக்கு இதற்கு முன்னர் ஒருமுறை கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. பிரசவத்தின்போது ரிஸ்கைக் குறைப்பதற்காக சிசேரியன் செய்துள்ளார்.

பெண்களில் கரு உருவாக்கத்தின் போது இரண்டு சிறிய டியூப்கள் சரியாக இணையாமல் uterus didelphys ஏற்படுகிறது.

இதில் உருவாகும் இரண்டு கருப்பைகளும் தனித்தனியான கருப்பை வாய்களும் இடுப்பு திசு சுவரும் பெற்றிருக்கும் வாய்ப்பு இருக்கிறது. சில சமயங்களில் இதனால் வெஜைனா இரண்டு அறைகளாகப் பிரியும்.

கருவுறும் வரை இரண்டு கருப்பை இருப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்காது. ஆனால் இப்படிக் கருவுற்றால், கருச்சிதைவு, கரு வளர்ச்சியின்மை, குறைப் பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தப் போக்கு ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறார்கள்.