சீனாவின் சாங்காய் நகரைச் சேர்ந்த லூ என்ற பெண், பணிபுரிந்த கல்வி நிறுவனத்தில், தனது மேற்பார்வையாளருக்கு (Supervisor) காலை உணவு வாங்கித்தராததால் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்து சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
லூவின் சூப்பர்வைசர் லியூ தினமும் காலை ஒரு அமெரிக்கானோ காபியும் முட்டையும் வாங்கி வந்து தர வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். அவர் சாப்பிடும்போது தண்ணீரும் வைக்க வேண்டுமாம்…
ஊழியர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் லியூவின் இந்த நிர்ப்பந்தங்கள் குறித்துப் பேசியிருக்கிறார். அதன் பிறகு மனிதவள இலாகாவால் வேலையைவிட்டு இழப்பீடு எதுவும் வழங்கப்படாமல் நீக்கப்பட்டார். இதனால் சோகமடைந்த லூ சமூக வலைதளங்களில் தனக்கு நடந்தவை குறித்து எழுதியிருக்கிறார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படவே, லூ மீண்டும் பணியமர்த்தப்பட்டார். தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும் தனிப்பட்ட விஷயங்களில் உதவி செய்யும்படி துணை அதிகாரிகளை நிர்பந்தித்ததற்காகவும் லியூவை பணியிலிருந்து நீக்கியது நிறுவனம்.
2020-ம் ஆண்டு Zhilian Zhaopin எடுத்த சர்வேயில் பங்கேற்ற 64% பேர் பணியிடங்களில் கொடுமைகளை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளனர். அதிகப்படியான பணித் திணிப்பு, வன்சொற்கள், பாலியல் மீறல்களை எதிர்கொள்ளும் பலரும் ராஜினாமா செய்திருக்கின்றனர். வெறும் 6% பேர் மட்டுமே தங்களுக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி சமூக வலைதளங்களில் பேசியிருக்கின்றனர்.
சீனாவில் பணியிட கொடுமைகளைத் தெளிவாகக் குறிப்பிடும் சட்டங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியாயமற்ற வேலைகள் கொடுக்கப்படும்போது அதனை நிராகரிக்க ஊழியர்களுக்கு உரிமை உண்டு என்பதைச் சட்ட வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
கொடுமைகள் நடக்கும்போது அதற்கான ஆதாரங்களாக ஸ்கிரீன் ஷாட்ஸ், ரெக்கார்டிங்ஸ் அனைத்தையும் ஊழியர்கள் சேமித்து வைக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
லூவின் அனுபவம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளதால், சீனாவில் பணியிட கொடுமைகள் குறித்து வெளிப்படையான உரையாடல்கள் எழுந்துள்ளன.