சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி டோல்கேட் அருகே வைகுந்தம் மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில், தனியார் திருமண மண்டபம் உள்ளது. நேற்று மதியம் இந்த மண்டபத்தின் அருகே இணைப்பு சாலையோரத்தில் உள்ள ஒரு சிறிய பாலத்தின் கீழ் முட்புதரில் கிடந்த ஒரு சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதனை பார்த்துவிட்டு போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அதற்குள் மேலாடைகள் கிழிந்து அழுகிய நிலையில் இளம்பெண் இறந்து கிடப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அதையடுத்து உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, “சம்பந்தப்பட்ட இளம்பெண் கொலை செய்யப்பட்டு 5 நாள்கள்தான் ஆகியிருக்க வேண்டும். இறந்தவருக்கு சுமார் 20 வயது இருக்க வாய்ப்புள்ளது. இவர் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. கையில் ஆறு விரல்கள் இருக்கின்றன. அதனை வைத்து வேறு எந்த காவல் நிலையத்திலும் பெண் காணாமல் போய்விட்டதாக புகார் எழுந்துள்ளதா என்று விசாரித்து வருகிறோம்” என்றனர்.