சட்டமன்றத் தேர்தலால் பரபரப்பாகியிருக்கிறது ஹரியானா மாநிலம். தேசியக் கட்சிகளான பா.ஜ.க-வும், காங்கிரஸும் நேரடியாக மோதிக் கொள்ளும் இந்த மாநிலத்தில், சிறு சிறு கட்சிகள், சுயேச்சைகளும் ஆதிக்கம் செலுத்துவதால், களம் சுவாரஸ்யமானதாக மாறியிருக்கிறது.
வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில், பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவைப்படுகின்றன. 2014-ம் ஆண்டில் 47 இடங்களை வென்ற பா.ஜ.க எளிதாக ஆட்சியமைத்தது. ஆனால், 2019 சட்டமன்றத் தேர்தலில், 40 தொகுதிகள் மட்டுமே பா.ஜ.க-வுக்குக் கிடைத்தன. 10 தொகுதிகளை வென்ற மாநிலக் கட்சியான ஜே.ஜே.பி-ன் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைத்தது பா.ஜ.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்படவே, கடந்த மார்ச் மாதத்தில், ஆதரவைப் திரும்பப் பெற்றது ஜே.ஜே.பி. இருந்தும், சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது பா.ஜ.க.
கோபத்தில் விவசாயிகள், இளைஞர்கள்!
அக்டோபர் 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு. இந்த முறை பா.ஜ.க-வுக்கு தேர்தல் களம் அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடியதில் ஹரியானா விவசாயிகளின் பங்கு அதிகம். அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், ஒன்றரை வருடப் போராட்டத்தில் சுமார் 700 விவசாயிகள் உயிரிழந்திருந்தனர். மேலும், விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையான `குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்பது இன்று வரை கொண்டுவரப்படாததும் அவர்களைக் கடுங்கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக, போராட்டத்தை முன்னெடுத்த கிராமங்களை முடக்கியதும், விவசாயிகள் மத்தியில் பா.ஜ.க மீதான கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் பலரும் அவதிப்பட்டு வந்த நிலையில், ராணுவத்துக்கான ஆட் சேர்ப்பில் `அக்னிபாத்’ திட்டத்தைக் கொண்டுவந்தது மத்திய பா.ஜ.க அரசு. இதனால், உச்சக்கட்ட அதிருப்தியிலிருக்கிறார்கள் ஹரியானா இளைஞர்கள். மேலும், பா.ஜ.க-வின் முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரமும் ஹரியானா தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிஜ் பூஷணுக்கு எதிராகப் போராடியவர்கள் பலரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர, பொருளாதாரத்தில் பின்னடைவு, தீவிர தண்ணீர் பிரச்னை என 10 ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சிமீது ஹரியானா மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பாசிட்டிவ் வைபில் காங்கிரஸ்!
2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஹரியானாவிலுள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்றியது பா.ஜ.க. ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில், ஐந்தில் மட்டுமே வென்றது. உட்கட்சிப்பூசலில் திண்டாடினாலும், பா.ஜ.க மீதான அதிருப்தி, காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகளைப் பெற்றுத் தந்தது. இளைஞர்கள் மத்தியில் ராகுல் காந்தியின் செல்வாக்கு கூடியிருப்பதும் அவர்களுக்கு பலம் சேர்க்கிறது. ஹரியானாவில் அரசியல் செல்வாக்குமிக்க ஜாட் சமூக மக்கள், `அரசியல் அதிகாரத்தில் எங்களுக்கு பா.ஜ.க முக்கியத்துவம் கொடுக்கவில்லை’ என அதிருப்தி தெரிவித்திருந்தனர். அதைத் தங்களுக்குச் சாதகமாக்கும் வேலையிலும் காங்கிரஸ் இறங்கியிருக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கத்தை இழந்தாலும், இந்தியர்களின் இதயத்தை வென்றிருந்த வினேஷ் போகத் காங்கிரஸில் இணைந்திருக்கிறார். கூடவே, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் காங்கிரஸில் சேர்ந்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வினேஷ் போகத்துக்கு ஜூலானா தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பளித்திருக்கிறது காங்கிரஸ். இந்த பாசிட்டிவான விஷயங்களுக்கு மத்தியில், காங்கிரஸுக்குப் பெரும் தலைவலியாக அமைந்திருக்கிறது உட்கட்சிப்பூசல்.
களம் எப்படியிருக்கிறது?
ஹரியானா அரசியலை உற்றுநோக்கும் சிலர், “பா.ஜ.க மீதான அதிருப்திகளால், ஹரியானாவில் காங்கிரஸின் கை சற்று ஓங்கியிருக்கிறது. அதே நேரம், பா.ஜ.க, காங்கிரஸைத் தவிர ஆம் ஆத்மி, ஜே.ஜே.பி- அசாத் சமாஜ் கட்சிக் கூட்டணி, ஐ.என்.எல்.டி – பகுஜன் சமாஜ் கூட்டணி, ஹரியானா லோகித் கட்சி ஆகிய கட்சிகள் களத்தில் இருக்கின்றன. கடந்த தேர்தலில், ஏழு இடங்களில் சுயேச்சைகள் வெற்றிபெற்றிருந்தனர். எனவே, அவர்களும் வாக்குகளைப் பிரிக்கக்கூடும். பா.ஜ.க அதிருப்தி வாக்குகள் இப்படிப் பலவாறாகப் பிரிந்து செல்வது, காங்கிரஸுக்குப் பின்னடைவாக அமையும்.
அதே நேரம், வேட்பாளர் தேர்வு, வாக்குறுதிகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தியிருப்பதால், நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் வெற்றிபெறாத பட்சத்தில், தொங்கு சட்டமன்றம் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம். அதே நேரம், மத்தியிலுள்ள பவரை வைத்து கடைசி நேரத்தில் பா.ஜ.க நகர்த்தும் காய்கள், அவர்களுக்குச் சாதகமாக முடியவும் வாய்ப்பிருக்கிறது” என்கின்றனர்.
ஹரியானாவில் ஆட்சி மாற்றம் நிகழுமா அல்லது தொங்கு சட்டசபை ஏற்படுமா என்பதையெல்லாம் அக்டோபர் 8-ம் தேதி வரை காத்திருந்து பார்ப்போம்!