`விளையாட்டு வீரருக்கான அத்தனை திறமைகளும், கலைஞரிடம் இருந்தன; எனவேதான்…’ – துணை முதல்வர் உதயநிதி

விருதுநகர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றங்களுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவக் கல்லூரி கலை அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், தமிழக துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

ஸ்போர்ட்ஸ் கிட்

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழக்கும் திட்டத்தை மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிவைத்தோம். அதன்படி, தமிழகத்தில் உள்ள 12ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளுக்கும், ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவருகிறோம். இதுவரை தமிழ்நாடு முழுக்க 18 மாவட்டங்களில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை வழங்கியிருக்கிறோம். தென் மாவட்டங்கள் வீரத்துக்கு பேர்போன மாவட்டங்கள். வீரத்தில் மட்டுமல்ல, வீரமிக்க விளையாட்டுக்களிலும் தலைசிறந்த மாவட்டங்கள். குறிப்பாக விருதுநகர், கோவில்பட்டி, பாளையங்கோட்டை போன்ற ஊர்களில் இருந்து ஏராளமான திறமைமிகு விளையாட்டு வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை மூலம் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாட்டில் விளையாட்டினை, மாபெரும் இயக்கமாகவே மாற்றியுள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கென 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 36 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், 5 பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் சென்ற ஆண்டு, 6 லட்சத்து 71 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில், இந்தாண்டு 11 லட்சத்து 56 பேர், பங்கேற்றுள்ளனர். இதுவே, இந்த போட்டியின் வெற்றியைப்பற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டின் பட்டித்தொட்டிகளில் இருந்து, தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுத் தொகையை, நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 37 கோடி ரூபாயாக உயர்த்தி தந்திருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த, ‘வாள்வீச்சு’ வீரர் ஜிஷோநிதி, லண்டனில் நடைபெற்ற Common wealth Fencing Championship-ல் பங்கேற்று வெண்கலம் வென்றவர். குஜராத், பஞ்சாப், கோவா, அஸ்ஸாம் மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் 4 முறை தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 7 தங்கப்பதக்கம், 2 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலப்பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ளார். இன்றைக்கு இந்திய ராணுவத்தில் நாட்டை காக்கும் பணியை செய்து வருகிறார். பலருக்கும் முன்மாதிரியாக திகழும் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுகள். அதேபோல, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை சுந்தரி, 38-வது தேசிய கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழ்நாடு அணியில் இடம்பெற்றவர்.

பேச்சு

இந்த இரண்டு பேர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள், உலக அளவில் பல்வேறு சாதனைகளை, தொடர்ந்து படைத்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு, ஹங்கேரியில் நடந்த, 45-ஆவது FIDE Chess Olympiad போட்டியில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப்பதக்கங்களை வென்றது. தங்கம் வென்ற இந்திய செஸ் அணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, ஸ்ரீநாத் நாராயணன், வைஷாலி ஆகியோர், இடம்பெற்று சிறப்பான பங்களிப்பைத் தந்தனர். அவர்களுக்கு தமிழக முதலமைச்சர், மொத்தம் 90 லட்சம் ரூபாயை, உயரிய ஊக்கத்தொகையாக வழங்கினார். அதேபோல, பாரீஸில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கு, தமிழ்நாட்டில் இருந்து 6 மாற்றுத்திறனாளி வீரர்களை அனுப்பி வைத்தோம். அந்த ஆறு வீரர்களும், போட்டிக்கு செல்வதற்கு முன்பாகவே தலா 7 லட்சம் ரூபாயை தமிழக முதலமைச்சர் ஊக்கத்தொகையாக வழங்கினார். அவர்களில் பதக்கம் வென்ற 4 பேருக்கு மொத்தம் 5 கோடி ரூபாய் அளவுக்கு முதலமைச்சர் பரிசுத்தொகையை வழங்கியுள்ளார். இந்த மூன்று வருடங்களில் மட்டும், கிட்டத்தட்ட 1,300 விளையாட்டு வீரர்களுக்கு, 38 கோடி ரூபாய்க்கும் மேலாக, உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கூட்டத்தினர்

அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பது விளையாட்டு வீரர்களின் பல வருடக் கோரிக்கை. கழக அரசு அமைந்த பிறகு, முதலமைச்சரின் சீரிய நடவடிக்கைகளின் பேரில், முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க இருக்கிறோம். ஏழை, எளிய, மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை’ மூலம் தொடர் உதவிகளை செய்து வருகிறோம். இந்த அறக்கட்டளையின் மூலம் நிதியுதவிப் பெற விரும்புகின்ற விளையாட்டு வீரர்கள், TNCF இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பார்முலா-4 இரவு நேர கார் பந்தயத்தை சென்னையில் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தினோம். கடந்த ஜனவரி மாதம் கேலோ இந்தியா இளையோர் போட்டிகளை வரலாற்றிலேயே முதன்முறையாக, தமிழ்நாட்டில் நடத்திக் காட்டினோம். கேலோ இந்தியா போட்டியில், 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் தமிழ்நாடு முதன் முறையாக பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. விளையாட்டுத்துறையில் மட்டுமல்ல, அரசின் பல்வேறு துறைகளும் இன்றைக்கு மகத்தான சாதனைகளைப் படைத்து வருகின்றன.

வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, மகளிர் நலன் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என மத்திய அரசின் நிதி ஆயோக் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமல்ல, மத்திய அரசின் புள்ளியியல் துறை சார்பில் நேற்று வெளியான புள்ளிவிவரத்தின்படி இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான் என்றும், இந்தியாவிலேயே அதிகளவில் வேலைவாய்ப்பை தரக்கூடிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி எல்லாத்துறைகளிலுமே, தமிழ்நாடு இந்தியாவுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

துணை முதல்வர் உதயநிதி

கிராமங்களில் இருந்து விளையாட்டுத்துறையில் நிறைய திறமையாளர்கள் வரவேண்டும். அதன் அடிப்படையில் தான் ‘கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ்’ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். ஒரு விளையாட்டு வீரனுக்கு இருக்கக்கூடிய அத்தனை குணங்களும், திறமைகளும்,, கலைஞரிடம் இருந்தன. அதனால்தான், இந்த திட்டத்திற்கு கலைஞரின் பெயரை சூட்டினோம். எப்போதும் யாராலும் வீழ்த்த முடியாத ஓர் அரசியல் வீரராக, கலைஞர் திகழ்ந்தார். உபகரணங்கள் பெறும் இளைஞர்கள், கலைஞருக்கு இருந்த அத்தனை குணங்களையும், திறமைகளையும், நீங்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என பேசினார்.