`கோயிலோ, தர்காவோ நடுரோட்டில் இருந்தால்..!’ – புல்டோசர் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மாநில அரசின் புல்டோசர் நடவடிக்கைகள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே, `எப்படிக் குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தாலே அவர்களின் வீட்டை இடிக்க முடியும்’ என குட்டு வைத்தது. அதோடு, கட்டுமானங்களை இடிப்பது தொடர்பாக முழு நாட்டுக்குமான ஒரு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

புல்டோசர் கொண்டு குடியிருப்புகள் அகற்றம்

இருப்பினும், அஸ்ஸாம் மாநில அரசு சுமார் 47 வீடுகளை புல்டோசரால் இடித்த சம்பவம், தற்போது மீண்டும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், புல்டோசர் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு இன்று விசாரித்தது. இதில், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அவரிடம், `ஒரு குற்ற வழக்கில் குற்றம்சாட்டப்படுவது புல்டோசர் நடவடிக்கைக்குக் காரணமாக இருக்குமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த துஷார் மேத்தா, “நிச்சயமாக அப்படியில்லை. கொடூரமான பாலியல் வன்கொடுமை, தீவிரவாத குற்றங்களில்கூட இவ்வாறு நடவடிக்கை எடுப்பதில்லை. நீதிபதி கூறியது போல, ஒருநாளுக்கு முன்பாக நோட்டீஸ் அளிக்கக் கூடாதுதான், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஆனால், நோட்டீஸ் வழங்குவதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், பெரும்பாலான முனிசிபல் சட்டங்கள், அவர்கள் கையாளும் விஷயத்தைப் பொறுத்து, நோட்டீஸ் வழங்குவதற்கான விதிகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு சமூகம் குறிவைக்கப்படுவதாகக் குற்றம்சாட்டும் சில நிகழ்வுகளின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பிப்பது கவலையளிக்கிறது” என்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம்

அப்போது, “நம்முடையது ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த விவகாரத்தில் மதம், சமூகம் என்ற வேறுபாடின்றி அனைவருக்குமான எங்களின் வழிகாட்டுதல் இருக்கும். சாலை, நடைபாதை, நீர்நிலை அல்லது ரயில் பாதை போன்ற இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தால், அங்கு பொது பாதுகாப்புதான் முக்கியமானது என்று நாங்கள் கூறியிருந்தோம். கோயிலோ, குருத்வாராவோ, தர்காவோ எதுவாயினும் சாலைக்கு நடுவில் இருந்தால் அது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. மேலும், அங்கீகரிக்கப்படாத கட்டுமான விவகாரத்தில் ஒரு சட்டம் இருக்க வேண்டும். ஆனால், அது மதம் அல்லது நம்பிக்கை சார்ந்ததாக இருக்கக் கூடாது” என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்தது. அதோடு, “முனிசிபல் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு வெவ்வேறு சட்டங்கள் இருக்கின்றன. எனவே, இதில் ஒரு ஆன்லைன் போர்ட்டல் இருக்க வேண்டும். ஒருமுறை நீங்கள் அதை டிஜிட்டல் மயமாக்கிவிட்டால், மக்கள் கவனமாக இருப்பார்கள்” என்றும் நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.