ஆவின் முறைகேடு; கனிமவள கடத்தல் சர்ச்சை; குமரி அரசியல் – `மாஜி’ ஆக மாறிய மனோ தங்கராஜ்

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், கடந்த 2023 மே மாதம் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 16 மாதங்களே ஆன நிலையில் அப்பொறுப்பிலிருந்தும் அமைச்சரவையிலிருந்தும் மனோ தங்கராஜ் நீக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதுகுறித்து விரிவாக விசாரித்தோம்.

நாசர்

செப்டம்பர் 28-ம் தேதி அரசின் பரிந்துரைக்கேற்ப அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ஆளுநர் மாளிகை. அதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது, அமலாக்கத்துறையின் பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி மற்றும் ஆவடி நாசர், கோ.வி செழியன் ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்பதாகவும் அமைச்சர் பொறுப்பிலிருந்த கா.ராமசந்திரன், மஸ்தான் மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அறிவிப்பு வந்தபின் துறை ரீதியாக தான் ஆற்றிய பணிகளை பட்டியலிட்டிருகிறார் மனோ தங்கராஜ்.

நம்மிடம் பேசிய கட்சி விவரமறிந்தவர்கள், “முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அதிகப்படியாக நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டுவந்தது. ஆனால் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் 2022 செப்டம்பர் மாதம் சராசரியாக 35.9 லட்சம் லிட்டர் பால் தான் கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே 2023 ஏப்ரல் மாதத்தில் 27.9 லட்சம் லிட்டராகவும் குறைந்து, பால்கொள்முதல் மற்றும் விற்பனையில் வீழ்ச்சி மற்றும் பல்வேறு ஊழல் முறைகேடுகள் காரணமாக அன்று பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்த ஆவடி நாசர் நீக்கப்பட்டு மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார்.

ஆவின் சிறப்பு விற்பனை

வீழ்ச்சியிலிருந்து பால்வளத்துறையை தூக்கிநிறுத்துவார் மனோ தங்கராஜ் என அவர்மீது அழுத்தம் அதிகரித்தாலும் ஒராண்டுக்கு பிறகு 2024-ல் 26.3 லட்சம் லிட்டராக வீழ்ச்சியடைந்தது.

ஆவின் இல்லம்

ஆனால் 2024 மே மாதம் `31 லட்சம் லிட்டரைத் தாண்டியது ஆவின் பால் கொள்முதல்’ எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பியது அமைச்சர் தரப்பு. ஏப்ரல் 21-ம் தேதி 26.3 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல், மே 28-ம் தேதி 31.24 லட்சம் லிட்டர் கொள்முதல் என தகவல் சொல்லப்பட்டது.‘திடீரென 5 லட்சம் லிட்டர் பால் அதிகப்படியாகக் கொள்முதல் ஆனது எப்படி? என்ற சர்ச்சையும் தொற்றிக் கொண்டது.

விசாரித்ததில் ஆட்சி மேலிடத்திலும் நல்ல பெயர் வாங்கும் நோக்கில் செயலிழந்த பால் கூட்டுறவு சங்கங்களுக்கு உயிர் கொடுத்து தனியாரிடமிருக்கும் தரமில்லாத பாலை ஆவினுக்கு மடை மாற்றியதோடு தரமில்லாத பாலுக்கு அதிகப்படியான விலை கொடுத்ததும் தெரிய வந்தது. அதோடு வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்துவைத்திருக்கும் வெண்ணெயையும் பால் பவுடரையும் பாலாக கணக்கு காட்டி ஏமாற்றிவருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது” என்றனர்.

ஆவின் பச்சை பால் பாக்கெட் விவகாரம்

`அமைச்சர் பதிவு பறிபோக நிர்வாக சீர்கேடுகள் மட்டுமல்ல, அரசியல் காரணங்களும் இருக்கின்றன” எனப் பேசத் தொடங்கிய குமரி மாவட்ட தி.மு.க நிர்வாகிகள், “ஆவின் நிறுவனத்தை மீட்டெடுக்க முடியாமல் போனது பெரிய மைனஸாக இருந்தாலும், மேற்கு மாவட்டச் செயலாளராகவும் தோற்றிருக்கிறார் மனோ தங்கராஜ். 2024 நாடாளுமன்ற தேர்தலில் குமரி தொகுதி வழக்கம்போல காங்கிரஸுக்கே சென்றது.

தி.மு.க நேரடியாக போட்டியிடும் இடங்களைவிட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்களில் தீவிரமாக வேலை செய்யுங்கள் என்ற முதல்வரின் உத்தரவை கண்டுகொள்ளாதது காங்கிரஸ் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. , காங்கிரஸ் எம்.பி வேட்பாளர் விஜய் வசந்த் தி.மு.க தலைமைக்கு புகாரளிக்கும் விதமாகவே மனோ தங்கராஜ் செயல்பட்டார். மேலும் ஆட்சிக்கு வரும்முன் கனிமவள பாதுகாவலராக காட்டிக் கொண்டவர் ஆட்சிக்கு வந்தபின் தனது உறவினரின் மூலம் கனிமவளம் கடத்தலில் மறைமுகமாக ஈடுபடுவதாகவும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை பெற்றார்.

கனிம கடத்தல் லாரிகள்

குமரி தொகுதியில் நா.த.க வளர்ச்சியடைந்தபோதும் அதனை முறியடிக்க பெரிதாக வியூகம் அமைக்காதது, குமரி மேயரை பணி செய்யவிடாமல் குடைச்சல் கொடுத்தது என சர்ச்சைகள் அவரை சுற்றிவளைத்தன. இப்படி அரசு நிர்வாகத்திலும் அரசியல் நடவடிக்கைகளையும் நோட்டமிட்ட கட்சி தலைமை. அமைச்சர் பொறுப்பிலிருந்து தூக்கியெறிந்திருக்கிறது. போதாகுறைக்கு அமைச்சருக்கென வழங்கப்பட்ட பங்களாவுக்கு தனது தனிப்பட்ட விவகாரங்களுக்காக பயன்படுத்தினார் என்பது வரை தலைமைக்கு புகாராக சென்றது” என்றனர்

மனோ தங்கராஜ்

இந்நிலையில், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டவுடன் மனோ தங்கராஜ் தொடர்பான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், அது அரசு மீதான குற்றச்சாட்டாக திரும்பிவிடுமோ என்ற நோக்கில் மேலிட அறிவுறுத்தலின் பெயரில் தனது சாதனைகளை பட்டியலிட்டிருக்கிறார் மனோ தங்கராஜ்.

“2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88