இஸ்ரேல் மத்திய கிழக்கில் பெரும் போரை நடத்தி வருகிறது. காசாவில் தொடங்கி, லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா-வில் இஸ்ரேலுக்கு எதிராகத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுகின்றன. மேற்காசிய, மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
நெதன்யாகு உடனான உரையாடல் பற்றி எக்ஸ் தளத்தில், “மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றி பிரதமர் நெதன்யாகுவிடம் பேசினேன். நம் உலகத்தில் தீவிரவாதத்துக்கு இடம் கிடையாது. நிலப்பரப்பு விரிவாக்கத்தைத் தடுப்பதும், பணயக் கைதிகளைப் பாதுகாப்பாக விடுவிப்பதும் முக்கியமானது. விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பவும் அமைதியை நிலைநாட்டவும் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும்” எனப் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான நீண்டநாள் பகை கடந்த அக்டோபர் மாதம் பெரும் சண்டையாக வெடித்தது. இருபுறமும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ரேலியர்கள் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டனர்.
காசாவுக்குள் நுழைந்து பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என அனைத்துக் கட்டமைப்புகளையும் தரைமட்டமாக்கியிருக்கிறது இஸ்ரேல்.
ஹமாஸுக்கு உதவியாக இருந்த லெபனானைச் சேர்ந்த ஹிஸ்பொல்லா அமைப்பையும் தாக்கியிருக்கிறது இஸ்ரேல் படைகள். தெற்கு லெபனானில் பல இடங்களில் தீவிரமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இந்தப் போர் இத்துடன் முடியாமல் ஹிஸ்பொல்லாவைப் போலவே ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஏமனைச் சேர்ந்த ஆயுத அமைப்பான ஹவுதியையும் குறிவைத்திருக்கிறது இஸ்ரேல். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆயுத பரிமாற்றத்துக்குப் பயன்படுத்திவந்த இரண்டு துறைமுகங்களைத் தாக்கியது இஸ்ரேல் விமானப் படை.
தொற்று வியாதிபோல மேற்கு ஆசியா முழுவதும் போர் பரவிவரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலையீடு அமைதிக்கு வழிவகுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.