`இதுதான் காரணமா’- அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டது ஏன்? – வழக்கறிஞர் கேள்வி

“ கொள்கை ரீதியாக செயல்படும் அமைச்சர்களை ஒதுக்குவது திமுக, பாஜக-வை நோக்கி நகர்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது” என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனோ தங்கராஜ்

ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைத்த மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், தமிழக அமைச்சரவையிலிருந்து மனோ தங்கராஜ் நீக்கப்பட்டதற்கு திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசியவர், “அமைச்சரவையிலிருந்து மனோ தங்கராஜ் நீக்கப்பட்டது முற்போக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மாடல் செயல்பாடுகளை தடுத்து திராவிட மாடல் என மாற்றியவர். `மோடிக்கு எதிராக 108 கேள்விகள்’ என்ற புத்தகத்தை எழுதியவர், கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு எதிராகப் போராடியவர், ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்தது தவறா? 

தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தபோது மென்பொருள் ஏற்றுமதியை 21 சதவிகிதத்திற்கு மேலாக உயர்த்தியவர். 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்தார், ஆவினில் ஊழலை ஒழித்தார் அது தவறா?

நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரியிலும், விளவங்கோடு இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை பணம் கொடுக்காமல் வெற்றி பெற வைத்தவர். முதல்வர் எதற்காக அவரை நீக்கியிருக்கிறார் என்பதை விளக்க வேண்டும். கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளிலிருந்து கனிம வளம் அதானி துறைமுகத்திற்கு கொள்ளையடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனைத் தீவிரமாக எதிர்த்து பெரும்பான்மை குவாரிகளை மூடியவர் மனோ தங்கராஜ்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

கனிமவளக் கொள்ளையர்கள், லாரிகள் வைத்திருக்கும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வருகின்ற லாபமெல்லாம் தடைப்பட்டது. ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை அவர் தடுக்கிறார் என்பதால் உளவுத்துறையிலுள்ள ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள், பாஜகவினர் மற்றும் கனிமவளக் கொள்ளையர்கள் கூட்டாக இணைந்து அவரை நீக்க அழுத்தம் தந்திருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த முடிவு திமுகவின் பொதுச்செயலாளருக்கும், துணைப் பொதுச்செயலாளருக்கும் தெரியுமா? இதுகுறித்து திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்திலோ உயர்மட்ட கூட்டத்திலே முடிவு எடுக்கப்பட்டதா?

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முற்போக்கு அமைப்புகள், திராவிட கட்சிகளிடமும் நன்மதிப்புகளைப் பெற்றவர், துறையில் சிறப்பாகப் பணிபுரிந்து பாராட்டு பெற்றவர். திமுகவிற்கு சவாலான கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்தவரை அமைச்சரவையிலிருந்து நீக்க எப்படி முடிவு எடுக்கப்பட்டது?

திமுகவிற்காக பல முற்போக்கு இயக்கங்களுடன் களத்தில் பல மாதங்கள் வேலை செய்துள்ளோம். மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றின் வாக்குகளை அறுவடை செய்தது திமுக. எல்லாவற்றையும் செய்துவிட்டு முற்போக்காளர்கள் விரும்பும் கொள்கையாளர்கள் நீக்கப்படுவது எந்தவிதமான நடைமுறை?

செந்தில் பாலாஜி கட்சிக்கு வந்தவுடன் முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது.  அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரம் இரண்டு நாள் கையெழுத்திடும் நிபந்தனை ஜாமீனில் வந்தவரை அவசர அவசரமாக அமைச்சராக அறிவிக்கிறீர்கள், அதேநேரம் கொள்கையாளர்களை நீக்கி மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறீர்கள்? செந்தில் பாலாஜி அமைச்சராகி, நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திடுவது அவமானமாக தெரியவில்லையா ? மதுரையில் பி.டி.ஆரை டம்மியாக்கி விட்டீர்கள், கொள்கை ரீதியாக பேசி வந்த செந்தில்குமார்க்கு சீட்டே வழங்காமல் டம்மியாக்கி விட்டீர்கள் தற்போது, மனோ தங்கராஜை அமைச்சரவையிலிருந்து நீக்கி விட்டீர்கள், தங்கம் தென்னரசுக்கு டம்மியான பதவி கொடுத்திருக்கிறீர்கள்.

மனோ தங்கராஜ்

முதல்வர் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தது என்ன காரணத்திற்காக எனப் பல சந்தேகங்கள் எழுகின்றன? ராஜ்நாத் சிங் வருகை, கலைஞர் நாணயம் வெளியீடு, ஆளுநர் பதவி காலம் முடிந்த நிலையிலும் திமுக எதிர்க்காதது, ஆளுநரின் தேநீர் விருந்தில் அமைச்சர்களுடன் பங்கேற்றது எல்லாம் சந்தேகத்தை எழுப்புகிறது.

 தமிழகத்தில் உள்ள முற்போக்கு அமைப்புகள் கி.வீரமணி திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் எல்லோரும் திமுகவிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.

கொள்கை ரீதியாக உள்ளவர்களை வீழ்த்திட்டு துணை முதலமைச்சரை கொண்டு வருவது எந்த வகையான சிந்தனையை மக்கள் மத்தியில் உருவாக்கும்?” என்று தெரிவித்துள்ளார்.