சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, கோவை ஈஷா யோக மையத்தில் காவல்துறை மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனைவர் காமராஜ். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘எனது மகள்கள் லதா மற்றும் கீதா ஈஷா மையத்தில், யோகா கற்க சென்றனர். பிறகு அங்கேயே தங்கிவிட்டார்கள். அங்கு அவர்களை தனி அறையில் அடைத்து துன்புறுத்துவதாக தகவல் வருகிறது. இதனால் நானும், என் மனைவியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நான் ஈஷாவிடம் பொது மன்னிப்பு கேட்டால்தான், மகள்களுடன் பேச முடியும் என்று கூறுகிறார்கள். எங்கள் மகள்களை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு மகள்களும், ‘பெற்றோர் எங்களை அவமானப்படுத்துகிறார்கள்.’ என்று கூறினர். அதற்கு நீதிபதிகள், ‘நீங்கள் முற்றும் துறந்த ஞானிகள் ஆகிவிட்டீர்களே. பிறகு இதை ஏன் பொருட்படுத்த வேண்டும்.’ என்று கேள்வி எழுப்பினர். மேலும், ‘ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்துவிட்டு, மற்றவர்களை சன்னியாசி ஆக்குவது ஏன்.’ என்றும் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து நீதிபதிகள், ‘நாங்கள் யாருக்கும் ஆதரவாகவும், எதிராகவும் இல்லை. இருப்பினும் சில சந்தேகங்கள் உள்ளன. எனவே ஈஷா யோக மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்று ஆய்வு செய்து, அக்டோபர் 4ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.’ என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோவை ஈஷா மையத்தில் அதிகாரிகள் இன்று காலை முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. அதன்படி சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மொத்தம் 6 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனும் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88