தமிழ்நாடு அமைச்சரவையில் ஐந்தாவது முறையாக மாற்றம் செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உதயநிதியைத் துணை முதல்வராக அறிவித்ததோடு, ஆறு பேரின் இலாகாக்களை மாற்றியிருக்கிறார். மூவரை அமைச்சரவையிலிருந்து நீக்கியும், நான்கு பேரை அமைச்சரவையில் சேர்க்கவும் செய்துள்லனர். அதில் செந்தில் பாலாஜி, நாசர் தவிர இருவர் அமைச்சரவைக்கே புதிது. புதிதாக அமைச்சரவையில் இணைத்தவர்களில் கோவி செழியனையும் சேர்த்து தற்போது தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாடு வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாதது இது என்கிறார்கள். இப்போது அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் என நால்வருக்கும் முக்கியப் பொறுப்பு கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதிலும் எப்போதும் இல்லாத வகையில், உயர்கல்வித்துறைக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பிருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள்.
நான்கு தலித் உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்ததன் பின்னணி என்ன என்று அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம்…
“உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளது என்ற பேச்சு எழத் தொடங்கியதுமே, அதற்குப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதிலும் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான வி.சி.க-விலிருந்தே தலித் ஒருவர் முதல்வராகும் சூழல் தமிழ்நாட்டில் இல்லை எனப் பேசியது தொடங்கி, துணை முதல்வர் பதவியைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றதோடு, வி.சி.க தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில், ”ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு” என்று பேசிய வீடியோவும் பதிவிடப்பட்டு, பேசுபொருளானது.
மேலும், வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும் போது 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் திருமாவளவன் ஆக கூடாதா” எனப் பேசினார். இந்த பரபரப்புக்கு மத்தியில்தான் தமிழ்நாடு அமைச்சரவையில் முதல் முறையாக நான்கு தலித் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இது குறித்து, வி.சி.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனைச் செல்வன், ”சமூக நீதி பயணத்தில் இது ஒரு மைல் கல். தமிழக வரலாற்றில் பட்டியல் சமூகத்தவர் நான்கு பேர் அமைச்சரவையில் இடம் பெறுவது இதுவே முதல் முறை” எனப் பேசியிருக்கிறார்.
தலித்துகளுக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமூகநீதி பேசும் தி.மு.க ஆட்சியிலும் இதே நிலைதான் நீடிக்கிறது என்ற விமர்சனமும் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்ததாலேயே தலித் பிரதிநிதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததோடு அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவருக்கு உயர்கல்வித்துறை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறையை ஒதுக்கியதோடு அதை வி.சி.க-வினரை வைத்தே புகழ்ந்து பேசவும் வைத்துவிட்டார் என்கிறார்கள்.
மேலும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரான அவரை உயர்கல்வித்துறையில் பொறுப்பாக்கியிருப்பதன் மூலமாக, மேடைகளில் ஆளுநருக்குக் கடிவாளம் போட முடியும். இனி இஷ்டத்திற்கு வாய்க்கு வந்ததையெல்லாம் ஆளுநரும் பா.ஜ.க-வினரும் பேச முடியாது.
அதுமட்டுமல்ல, தொடர்ந்து தலித்துகளுக்கு எதிரான கட்சி என தி.மு.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கட்டமைக்க முற்பட்ட வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவுமே இப்படிக் கூடுதல் பிரதிநித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88