செந்தில் பாலாஜி: `வழக்கை விசாரிக்க மற்றொரு அமர்வு நீதிபதியை நியமிக்க வேண்டும்!’ – உச்ச நீதிமன்றம்

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பணம் பெற்றுக்கொண்டு அரசு வேலை ஒதுக்கிய வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு சிறையிலடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். மேலும், வெளிவந்த மூன்றே நாளில் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

செந்தில் பாலாஜி

இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க தனியாக அமர்வு நீதிபதியை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முன்னதாக, செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்ற அடிப்படையில்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இப்போது, அவர் மீண்டும் அமைச்சராகியிருப்பதால் ஜாமீனைப் பரிசீலிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். அதற்கு, மறுபரிசீலனைக்கு ஒரு மனுவைத் தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.

அந்த உத்தரவில், “எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான 29 வழக்குகளைத் தற்போதைய அமர்வு நீதிபதி கையாள்கிறார். இதில், 20 வழக்குகள் விசாரணை நிலையில் இருக்கின்றன. சில வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. மொத்தமாக 2,000-க்கும் மேற்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களும், 600 அரசு தரப்பு சாட்சிகளும் இருக்கின்றன. குற்றப்பத்திரிகையிலுள்ள குற்றச்சாட்டுகளைப் பார்க்கும்போது, ​​இந்த வழக்குகளை முன்கூட்டியே முடிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம்

எனவே, சிறப்பு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்குகளை விசாரிக்க மேலும் ஒரு அமர்வு நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றம் நியமிப்பது பொருத்தமானதாக இருக்கும். குறிப்பாக, எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் தற்போதைய அமர்வு நீதிபதி பணிச்சுமை காரணமாக, செந்தில் பாலாஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணையை விசாரிக்க மற்றொரு அமர்வு நீதிபதியை நியமிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.