பழைய சோறு, கறி தோசை தொடங்கி `மெய்யழகன்’ தோனி வரை – செம்பொழில் கிராமிய திருவிழா

தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே சொந்த கிராமத்துக்குச் சென்றுவிட்டு மற்ற நாள்களில் `வேலையும் வேலை நிமித்தமுமாக’ சென்னையிலிருந்தபடியே தங்கள் கிராமத்தை நினைத்து ஏங்குபவர்கள் பலர் இருக்கின்றனர்.

அதிலும் அப்பா, அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்தவர்கள் பலருக்கும். அவர்கள் அம்மா, அப்பாக்கள் சுற்றிப் பார்க்க அவர்களுக்கு ஏற்ற இடம் இல்லாமல் தவித்திருப்பார்கள். அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது `செம்பொழில்’ – கிராமத்துத் திருவிழா. அந்த பிரமாண்டமான அரங்கினுள் சென்றதும் ஆலமரத்து அடியில் விநாயகர் கோயில், தள்ளி சென்றால் கூரை வேய்ந்த டீக்கடை, ஒரு பக்கம் நாட்டு மாடுகளின் கொட்டகை, இன்னொரு பக்கம் கரகாட்டம், சிலம்பாட்டம் என சென்னையின் நடுவே ஒரு குட்டி கிராமத்தை கொண்டு வைத்த மாதிரி, நந்தனம் YMCA மைதானத்தில் கடந்த 27, 28 மற்றும் 29 தேதிகளில் களைக்கட்டியது ‘செம்பொழில் – மூன்று நாள் கிராமத்து திருவிழா’.

‘கிராமத்து வாழ்க்கை வாழணும்’ என்று நினைப்பவர்களுக்கு, இந்த மூன்று நாள் திருவிழா நல்ல சான்ஸ். கிராமத்து கோயில், ராட்டினம், மாட்டு கொட்டகை, குழாய் செட், குதிரை சவாரி, மாட்டு சவாரி என இந்த விழா அப்படியே கிராமத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

கிட்டதட்ட 110 கடைகள்…

கிட்டதட்ட 110 கடைகள். ‘தம்பி…இது தான் பறை. இது மத்தளம். இது அடிச்சா, ஊர்ல எப்படி ஆடுவோம் தெரியுமா?’ என்று பாரம்பரிய இசைக்கருவி கடையில், ஒரு அப்பா தன் குட்டி மகனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். ஓவியக் கடையில், ஒரு அம்மாவும், அவரது மகளும் ஓவியமாக வரையப்பட்டுக் கொண்டிருந்தார்கள். எதிர்கடையில் பனை ஓலை கிளுகிளுப்பையை பேத்திக்கு வாங்கி தந்துக்கொண்டிருந்தார்கள் ஒரு தாத்தாவும், பாட்டியும். இப்படி அந்த விழாவில் எந்த கடையில் நுழைந்தாலும் பாரம்பரிய பொருட்களும், கிராமிய அனுபவங்களும் குவிந்து கிடந்தன.

கிராமத்தை உணர கிராம செட் மட்டும் போதாது என தண்ணீர் குடம் தூக்குதல், இளவட்ட கல் தூக்குதல், ஸ்லோ சைக்கிள் ரேஸ் என மண் மணம் சார்ந்த ஏகப்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளுக்கு நடுவே கரகாட்டம், சிலம்பாட்டம் மாதிரியான கிராமிய கலைகளும் இடம்பெற்றது கூடுதல் சிறப்பு.

நாட்டு வகை ஆடு, மாடு, நாய், குதிரை மட்டுமல்லாது முயல், எலி போன்ற விலங்குகளும் இருந்தன. இதில் தற்போது லேட்டஸ்டாக நம் அனைவருக்கும் மெய்யழகன் படத்தில் அறிமுகமான ‘தோனி’ காங்கேய மாடும் வந்திருந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில் ‘மெய்யழகன்’ பட ஹீரோ கார்த்திக் வந்திருந்தது ஹைலைட்.

‘மெய்யழகன்’ பட ஹீரோ கார்த்திக்

இனி மேலே சொன்னதையெல்லாம் விட முக்கிய விஷயத்திற்கு வருவோம்…’சாப்பாடு’. பழைய சோறு தொடங்கி மதுரை கறி தோசை, பாயா, இட்லி கறிக்குழம்பு என ஏகப்பட்ட உணவு பட்டியல் நீண்டது. ஒவ்வொன்றும் சாப்பிடும்போதும் ‘அட’ சொல்ல வைக்கிறது. சென்னைக்கு வந்த பிறகு சொந்த ஊர் சுவை மறந்து போனவர்களுக்கு இது மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. வார இறுதி விடுமுறையில் சொந்த ஊர் திருவிழாவுக்கு சென்று வந்த அனுபவத்தை வழங்கியதாக வந்தவர்கள் வாய் நிறைய வாழ்த்திச் சென்றனர்.

டோனி!

கோயிலில் தொடங்கி சாப்பாட்டில் முடித்து வெளியே வரும்போது, ‘அடுத்து எப்போ?’ என்ற கேள்வியைக் கேட்டபடியே தங்கள் வீடுகளுக்குக் கிளம்பினர் மக்கள்.