மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை தியாகி என்கிறார். இதே செந்தில் பாலாஜி மீது ஸ்டாலின்தான் வழக்கு தொடுத்தார், அந்த வழக்கில்தான் தற்போது சிறைக்கு சென்றார்.
நாட்டுக்காக பாடுபட்ட செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்றோரை தியாகி என்று அழைக்கிறோம். ஆனால், மக்கள் பணத்தை கொள்ளையடித்து 471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியை தியாகி என்று ஸ்டாலின் ஒப்பிடலாமா?
கூட்டணி கட்சிகளை யார் தடுத்தாலும் பிரிக்க முடியாது என்று திமுக பவளவிழா கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். திருமாவளவன் ஏற்கெனவே தீப்பந்தத்தை ஏந்திவிட்டார், மது ஒழிப்பு மாநாட்டில் அனைத்து கட்சிகளும் வரலாம், அதிமுக வரலாம் என்று கூறினார். ஸ்டாலின் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் அவருக்கு சேர வேண்டியதை சேர்த்துவிட்டு பிளவு இல்லை என்று மறுப்பு அறிக்கையை வெளியிடச் செய்தார். தற்போது ஆளுங்கட்சியாக திமுக உள்ளது, அதனால் அனைவரும் உள்ளனர். ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க அனைவரும் எடப்பாடியாரை நோக்கி வருவார்கள்.
தற்போது திமுக இரண்டாவது பவளவிழா மாநாட்டில் கனிமொழிக்கு மேடையில் இடம் இல்லை. ஆனால், உதயநிதி உட்கார வைக்கப்பட்டுள்ளதன் பின்னணி என்ன?
இன்றைக்கு கடுமையாக விலைவாசி உயர்ந்துவிட்டது, அரிசி முதல் எண்ணெய் வரை அத்தனையும் விலைவாசி உயர்ந்துள்ளது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருவோம் என்று கூறி மூன்று வருடம் கிடப்பில் போட்டனர், எடப்பாடி பழனிசாமி இதற்கு சரியான சம்மட்டி அடி கொடுத்தவுடன் பாதிப் பேருக்கு கொடுத்துவிட்டு மீதி பேருக்கு கொடுக்காமல் விட்டுவிட்டனர். அனைவருக்கும் வழங்குவோம் என்ற உதயநிதி அல்வா கொடுத்து வருகிறார்.
திமுக வழங்கியதோ மடு அளவு, உயர்த்திய விலைவாசியோ மலை அளவு, ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கொடுத்துவிட்டு டாஸ்மாக் விலையை உயர்த்தி பல கோடி வருமானம் ஈட்டுகிறார்கள். திமுக-வால் மதுவை ஒழிக்க முடியாது. மீண்டும் செந்தில் பாலாஜியிடம்தான் இந்த துறை வரும், இன்னமும் விலையை உயர்த்துவார்கள்.
அறிஞர் அண்ணா புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காகவிற்கு சென்று வந்தபோது அந்த செலவு குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, தமிழக மக்களின் வரிப்பணத்தில் போகவில்லை, எம்.ஜி.ஆர்-தான் அத்தனை செலவையும் ஏற்றார் என்று கூறினார்
ஆனால், இன்றைக்கு மக்கள் வரிப்பணத்தில் ஸ்டாலின் வெளிநாடு சென்று, அங்கு அந்த நாள் முதல் இந்த நாள் வரை என்று சிவாஜி பாடிய பாடலை பாடிக்கொண்டே சென்றார். நீங்கள் வெளிநாடு செல்லுங்கள், அதற்கு அரசு பணத்திலா செல்வது?
எம்.ஜி.ஆர் சினிமா தவிர்த்து மக்களுக்காக உழைத்து போராடினார். அதனால் மக்கள் அவரை ஏற்றுக் கொண்டனர். சினிமா நடிகர்கள் கட்சி ஆரம்பித்து வருகிறார்கள். ஆனால், வெற்றிபெற்ற வரலாறு கிடையாது. சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தே போனியாகவில்லை.
தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது, எங்கு பார்த்தாலும் போதை கலாசாரம் , ஊழல் ஆட்சியாக, குடும்ப ஆட்சியாக உள்ளதால் மக்கள் சூடம் ஏற்றி, இறைவா இந்த ஆட்சியை நீயே கேட்க வேண்டும் என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைக்கு தனது மகனை துணை முதலமைச்சர் ஆக்கியுள்ளாரே ஏன் துரைமுருகனை ஆக்க வேண்டியது தானே? இன்றைக்கு உதயநிதியை துணை முதலமைச்சராக்க அனைவரும் ஜால்ரா போடுகிறார்கள். துணை முதலமைச்சர் பதவி என்ன உங்கள் வீட்டு சொத்தா என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எனக்கு பொருளாளர் பதவி வழங்கி உள்ளார். ஆர்.பி.உதயகுமாருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவியை வழங்கி உள்ளார். தன்னுடைய குடும்பத்தினருக்கு இந்த பதவியை அவர் வழங்கவில்லை,
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் ஆட்சிக்கு வருவார். இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பாமல் ஜால்ரா போட்டு வருகிறார்கள் இதையெல்லாம் மக்கள் பார்த்துதான் வருகிறார்கள்.” என்று பேசினார்.