நெல்லை மாநகராட்சி: `கூவமாக மாறும் தாமிரபரணி!’ – கூட்டத்துக்கு குடத்துடன் வந்த கவுன்சிலரால் பரபரப்பு

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாய தேவைக்குப் பயனளிக்கிறது. அத்துடன், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. நெல்லை மாநகராட்சி எல்லைக்குள் 17 கி.மீ தூரம் பயணிக்கும் தாமிரபரணி ஆற்றில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் நேரடியாகக் கலக்கிறது.

நெல்லை மாநகராட்சி கூட்டம்

தாமிரபரணி ஆற்று நீரில் கழிவுகள் கலப்பதால் குடிக்கும் தரத்தில் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், தாமிரபரணி மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி புகழேந்தி, சுவாமிநாதன் அடங்கிய பெஞ்ச், தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதால் கூவம் போல மாறி வருவதாக வேதனை தெரிவித்தனர். அத்துடன், ஆற்றுக்குள் ஒரு சொட்டு கழிவு நீர்கூட கலக்கக் கூடாது என நெல்லை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா முன்னிலை வகித்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றபோது, 6-வது வார்டு கவுன்சிலரான பவுல்ராஜ் தோளில் குடத்துடன் கையில் பதாகை ஏந்தியபடி அரங்கிற்குள் வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள்

கூட்ட அரங்கினுள் வந்த கவுன்சிலர் பவுல்ராஜ், “தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது அதையே நாமும் மக்களும் குடிக்கிறோம். ஆற்றைப் பாதுகாக்க மாநகராட்சி சார்பாக திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்” என்று பேசியபடியே இருக்கையில் அமர்ந்தார். பின்னர் தனது கோரிக்கை மனுவை ஆணையர் சுகபுத்திராவிடம் கொடுத்தார்.

கவுன்சிலர் பவுல்ராஜ் தி.மு.க சார்பாக போட்டியிட்டு தேர்வானவர், இருப்பினும் முன்னாள் மேயர் சரவணனுக்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதால் அவர் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் புதிய மேயருக்கான தேர்தலின்போது, கட்சி அறிவித்த வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

கவுன்சிலர் பவுல்ராஜ்

இந்த நிலையில், புதிதாக தேர்வான மேயர் ராமகிருஷ்ணனை எதிர்த்து தற்போது செயல்பட்டு வரும் அவர் கூறுகையில், “கூவம் ஆறாக தாமிரபரணி மாறுவதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அந்த மன வேதனையில் தான் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தேன்.

உள்ளாட்சியில் நல்லாட்சி நடக்கிறதா என்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. நெல்லை மாநகராட்சி உறுப்பினர் சொல்லியும் ஏனென்று கேட்காத தலைமை உள்ள மாநகராட்சி நிர்வாகத்தால் எப்படி நல்லாட்சி கொடுக்க முடியும்? கட்சியில் இருந்து என்னைத் தற்காலிகமாக நீக்கினார்கள். ஆனால், கலைஞர் வழியில் பெரியார் கற்றுத் தந்த சுயமரியாதையோடு கட்சியில் இருந்து நானே நிரந்தரமாக விலகிக் கொண்டேன்” என்றார்.