சென்னை மாநகராட்சி: சொத்து வரி ஆண்டுதோறும் 6% உயர்வு; திமுகவை நெருக்கும் கட்சிகள்; மேயர் சொல்வதென்ன?

மேயர் பிரியா ராஜன் தலைமையில் கடந்த 27-09-2024 தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் செப்டம்பர் மாதத்துக்கான மாமன்றக் கூட்டத்தில் சொத்து வரியை ஆண்டுதோறும் 6% உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரி மேல் வரியாக மக்கள்மீது சுமையை அதிகரிக்கச் செய்யும் இந்தத் தீர்மானத்துக்கு தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் உள்படப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

தீர்மானமும்… கவுன்சிலர்களின் வெளிநடப்பும்:

குறிப்பாக, சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் சொத்து வரியை ஆண்டு தோறும் 6% அதிகரித்து வசூலிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அதற்கு அ.தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., ஆகிய கட்சிகளின் கவுன்சிலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், “ஏற்கெனவே 2022-ம் ஆண்டு உயர்த்தப்பட்ட 100% சொத்து வரி உயர்வால் சென்னை மக்கள், வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒவ்வொரு ஆண்டும் 6% சொத்துவரி உயர்த்தி வசூலிக்கப்படும் என்ற முடிவால் பொதுமக்கள் மேலும் வரிச்சுமைக்கு ஆளாகி இன்னும் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.” எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், கவுன்சிலர்களின் எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., ஆகிய தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள்:

இந்நிலையில், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் சென்னை மாநகராட்சியின் ஆண்டுக்கு 6% சொத்துவரி உயர்வு தீர்மானத்துக்குக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கடந்த 40 மாதங்களாக நடைபெறும் தி.மு.க-வின் காட்டாட்சி தர்பார் ஆட்சியில், அப்பாவி மக்களை வாட்டி வதைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது கொடுமையின் உச்சம். சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒரு சில தீர்மானங்கள், சென்னை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாகப் பணத்தைப் பிடுங்கும் வகையில் அமைந்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. குறிப்பாக, ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு. (சொத்து வரி உயர்த்தப்படும்போதெல்லாம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வும் மறைமுகமாக உள்ளடங்கியுள்ளது)

எடப்பாடி பழனிசாமி

தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு அளிப்பது வழக்கம். தனியாருக்குச் சம்பள உயர்வு என்பது அந்தத் தனியார் நிறுவனத்தில் லாபம் ஈட்டுதலைப் பொறுத்தது. ஆண்டுதோறும் சம்பள உயர்வு நிலையானதல்ல. அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம்தான் சம்பள உயர்வு. ஏற்கெனவே 100 சதவீதம் மின்கட்டண உயர்வை அறிவித்ததுடன், ஆண்டுதோறும் மின் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்துள்ள ஸ்டாலினின் தி.மு.க., அரசு, ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வை அறிவித்து, சென்னை மாநகர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. இதன்மூலம் குடிநீர் வரி, கழிவு நீர் அகற்றல் வரி என்று அனைத்து வரிகளும், சொத்து வரி உயர்வுக்கேற்ப தானாகவே உயர்த்தப்பட்டுவிடும்.” என அச்சம் தெரிவித்திருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம்

அதேபோல, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்துவரி உயர்த்த தி.மு.க., அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் விளைவாக, இது தொடர்பான தீர்மானத்தைச் சென்னை மாநகராட்சி நிறைவேற்றியுள்ளது. இதேபோன்று பிற உள்ளாட்சி அமைப்புகளும் சொத்துவரி உயர்வு குறித்த தீர்மானத்தை நிறைவேற்றும். தி.மு.க., அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. இந்த சொத்து வரி உயர்வின் மூலம் வீட்டின் உரிமையாளர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதோடு, வாடகைக்கு இருப்போரும் கூடுதல் வாடகை செலுத்த நேரிடும். இது மட்டுமல்லாமல், குடிநீர் வரியும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் படும் துன்பங்களைக் கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு ஆண்டு 6 சதவீதம் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.” எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தொடர்ந்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், “சென்னையில் சொத்து வரி மேலும் 6% உயர்வு: மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது, சொத்துவரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்! இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்து வரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது. மக்களைப் பாதிக்கும் வகையிலான சொத்து வரி உயர்வு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்து வரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமதாஸ்

சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்து வரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்குக் குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாகப் பாதிக்கும். மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற தி.மு.க., அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளைச் சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளைச் சுமத்துவதை அனுமதிக்க முடியாது. தி.மு.க.,வுக்கு வாக்களித்ததைத் தவிரத் தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்து வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்து வரியை உயர்த்தும் முடிவைக் கைவிட வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார்.

அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், “ஏழை, எளிய மக்களின் மீது சுமையை ஏற்றாமல் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த தேர்தல் அறிக்கையில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என வாக்குறுதியளித்த தி.மு.க., அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் இரண்டாவது முறையாகச் சொத்துவரியை உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தி.மு.க., அரசால் போடப்பட்ட வரிகளாலும், உயர்த்தப்பட்ட கட்டணங்களாலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் மக்களின் மீது சொத்து வரி எனும் பெயரில் கூடுதல் சுமையை ஏற்றுவது தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது. எனவே, ஏழை, எளிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் சொத்து வரி உயர்வுக்கான தீர்மானத்தை உடனடியாகத் திரும்பப் பெறுவதோடு, வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

மாநகராட்சி மேயர்களின் விளக்கம் என்ன?

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் 6% சொத்து வரி உயர்வு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றத்தின்போது பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதற்குப் பதிலளித்த மேயர் பிரியா, “இந்த சொத்து வரி உயர்வானது செமி-கமர்ஷியலான வணிக கட்டடங்கள் போன்றவற்றிடம்தான் பிரதானமாக வசூலிக்கப்படும். இப்போதைக்கு ரெசிடென்ஷியல் கட்டடங்கள், வீடுகளுக்கு இப்போது வசூலிக்கப்போவதில்லை” என்றார்.

அதேபோல துணை மேயர் மகேஷ்குமார், “இந்த சொத்து வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்தும், எல்லாருடைய கருத்தும். ஆனால், மத்திய அரசின் சுற்றறிக்கை, பரிந்துரையினால்தான் `நிதிக்காக’ இந்த தீர்மானத்தை நிறைவேற்றவேண்டிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இருப்பினும் இதுகுறித்து பரிசீலனை செய்வோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb