Udhayanidhi Stalin: ‘அன்று கலைஞர் மகன், இன்று ஸ்டாலின் மகன்’ – துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்

‘தி.மு.க’ 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குள் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், இப்போது துணை முதலமைச்சர் என கடகடவென கழகத்தில் வளர்ந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

2019-ம் ஆண்டு தி.மு.க இளைஞரணிச் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டு, 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று சட்டமன்றத்திற்குச் சென்றார். அந்தச் சமயத்தில் ‘அமைச்சர் பதவி கிடைக்குமா?’ என்ற கேள்விகள் எழ, ‘முதல்வர்தான் அதை முடிவு செய்வார்’ எனச் சொல்லி நகர்ந்தார். பிறகு, (2022) ‘இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை’ அமைச்சராக்கப்பட்டார்.

உதயநிதி ஸ்டாலின்

இப்படியாக உதியநிதியின் அரசியல் பயணம் கட்சிக்குள் வளர்ந்துகொண்டே செல்ல, கடந்த செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விருது பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், “இன்னும் ஏன் தயக்கம். உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டாமா?” என உதயநிதியின் ‘துணை முதலமைச்சர்’ பதவி குறித்த பேச்சைக் கிளப்பிவிட்டார்.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்ற பரபரப்பைக் கிளப்பிவிட்டனர் அறிவாலயத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்து அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் எனப் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து விவாதப் பொருளாக்கினர்.

கலைஞர், உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்

இந்நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது தி.மு.க. 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் சீனியர் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் இருந்தபோதே ஸ்டாலினை துணை முதல்வராக்கினார் கலைஞர். இப்போது, பல சீனியர் அமைச்சர்களுக்கு மத்தியில் உதயநிதியை துணை முதல்வாராக்கியிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

துணை முதல்வர் பொறுப்பேற்கும் அவருக்கு திமுக ஆதரவாளர்கள் வாழ்த்துத் தெரித்து வருகின்றனர். மறுபக்கம் ‘கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்…’ என வாரிசு அரசியல் தொடர்வதாகப் எதிர்கட்சகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்த உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள்!