தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ , “தி.மு.க ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இல்லை. இந்த ஆட்சி மீது மக்கள் வெறுப்பிலும் அதிருப்தியிலும் உள்ளனர். செந்தில் பாலாஜி அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அவர் மீது ஆளுநரிடம் புகார் தெரிவித்து அவர் மீது வழக்கு போட வழிவகுத்ததே தி.மு.க தான்.
அ.தி.மு.க சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து பிரசாரம் செய்தது மட்டுமின்றி, அவர் சிறைக்குப் போவார் என சொன்னது முதல்வர் ஸ்டாலின்தான். ஆனால், தற்போது அவர் 421 நாள்கள் சிறையில் இருந்ததை சாதனையாக கூறுகின்றனர். கூடுதலாக 79 நாள்கள் சிறையில் இருந்திருந்தால் 500 நாள்களைத் தொட்டிருக்கும்.
தி.மு.கவில் உள்ள மூத்த அமைச்சர்கள் மனம் நொந்து போய் வெளியே வந்திருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து வருகின்றனர். செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது அ.தி.மு.கவிற்கு நல்லதுதான்.
ஏற்கனவே அவர் அமைச்சராக இருந்தபோது டாஸ்மாக்கில் ஊழல் செய்து “10 ரூபாய் பாலாஜி” என்று பெயர் வாங்கினார். அந்த வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. மக்கள் ஏமாளிகள் கிடையாது, நடப்பது எல்லாம் மக்களுக்குத் தெரியும். குற்றம் சாட்டப்பட்டு ஜாமினில் வெளிவந்தவரை உச்சி முகர்ந்து வரவேற்று அமைச்சர் பதவி கொடுக்க முதல்வரும் அவரது குடும்பமும் முயன்றதை மக்களிடம் அதிமுக தொண்டர்கள் எடுத்துச் செல்வார்கள்.
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏ.டி.எம்-மில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னரில் தப்பிச் செல்கின்றனர். இந்தச் சம்பவம் சினிமாவை மிஞ்சி விட்டது. வெளிமாநில கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும் துணிச்சலாக தமிழகத்தை தேர்ந்தெடுத்து வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கு சாவு மணி அடிக்கும் தேர்தலாக இருக்கும். 2026-ல் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும். புதிதாக வரும் கட்சிகள் அதிமுகவிற்கு சவால் கிடையாது. திமுகவிற்கு மாற்று அதிமுக மட்டும்தான்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb