நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததுமே உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்றும், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் தி.மு.க வட்டாரத்தில் செய்திகள் அனலடித்தன. ஆனால், சட்டவிரோத பணச் சலவைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த பிறகு அமைச்சரவை மாற்றம் செய்யலாம் எனத் தலைமை இந்த முடிவுகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் தள்ளிப்போனதோடு ஜாமீன் கிடைப்பதிலும் சிக்கல் எழுந்தது. இதனால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி கொஞ்ச காலம் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்ந்தார்.
ஆனால், இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதைச் சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதைத் தாமதப்படுத்தியது. அதையடுத்து தனது அமைச்சர் பொறுப்பைத் தாமாக முன்வந்து ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, அதாவது 471 நாள்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
அந்த உத்தரவில் செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இதையடுத்து அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சு மீண்டும் சூடுபிடித்தது. செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வந்த அடுத்த இரண்டு நாளில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பும், அதோடு உதயநிதியை துணை முதல்வராக்கியும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திடும் நிபந்தனை ஜாமீனில் உள்ள ஒருவருக்கு எப்படி மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்கலாம் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தாலும், அவை எதற்கும் தி.மு.க தலைமை காது கொடுக்கவில்லை. மீண்டும் செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியதோடு அவர் முன்னர் கவனித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளுக்கு மீண்டும் அமைச்சராக்கியிருக்கிறது. இதன் பின்னணி என்னவென்று விசாரித்தோம்…
“செந்தில் பாலாஜிக்கு மீண்டும் இந்தத் துறையை நிர்வகிப்பதில் உடன்பாடு இல்லை. அதிலும் குறிப்பாக டாஸ்மாக்கை நிர்வகிக்க அவர் விரும்பவில்லை எனச் சொல்லப்பட்டது. காரணம் கொஞ்ச நாளைக்கு சர்ச்சை இல்லாத துறையை கவனிக்க விரும்பினார். எனினும், செந்தில் பாலாஜி ஜாமீனில் வந்தால் அவருக்கு மின்சாரத்துறையை ஒதுக்குவது என்பதில் உறுதியாக இருந்தது தலைமை. அதுமட்டுமல்ல, அதைக் கூடுதலாகக் கவனித்து வந்த தங்கம் தென்னரசுவால் நிதியோடு மின்சாரத்துறை என்ற இரண்டு பெரிய துறைகளைக் கவனிக்க முடியவில்லை. எனவே, அவரே அந்தத் துறையை மாற்றச் சொல்லிக் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகினது.
அதேபோல மதுவிலக்கைக் கூடுதலாகக் கவனித்து வந்த முத்துசாமியும் அந்தத் துறை வேண்டாம் என்ற முடிவில்தான் இருந்தார். இதற்கெல்லாம் ஒரே தீர்வு மீண்டும் அவற்றை செந்தில் பாலாஜியிடமே கொடுப்பதுதான் என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்தது. அதுமட்டுமல்ல, இதில் ஏதாவது ஒன்றை செந்தில் பாலாஜியிடம் கொடுக்கவில்லையென்றால் அது செந்தில் பாலாஜிமீது எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டதுபோல ஆகிவிடும் என யோசித்த தலைமை மீண்டும் அவருக்கு அந்த இரண்டு துறைகளையும் ஒதுக்கியிருக்கிறது” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
வழக்குகள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் என எல்லாவற்றையும் தாண்டி, இடையில் சீனியர்கள் கவனித்து மீண்டும் தன் கைக்கு வந்த இரண்டு துறைகளையும் அதிலிருக்கும் சவால்களையும் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88