மதுரை மருத்துவக் கல்லூரியில் LGBTQIA+ சமூகத்தினரைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கல்லூரி நிர்வாகம் மாணவர்களை வெளியேற்றிய நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த நிகழ்வுகள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு 84ஆம் ஆண்டில் படித்த மாணவர்கள் திருநர் மற்றும் பால்புதுமையினர் சமூகத்தினரைப் பற்றி ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று (28 செப்டம்பர்), காலையில் நடத்த நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருந்தனர். அதன்படி, நிகழ்ச்சியைத் தொடங்கினர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கல்லூரி நிர்வாகத்தினர் இடைமறித்து மாணவர்களை வெளியேறச் சொல்லி அறிவுறுத்தினர். இந்த சம்பவம் குறித்து இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் அழகு ஜெகன் அவர்களிடம் பேசினோம்.
“ஒரு மாதம் முன்பே இந்த பால்புதுமையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சுரேஷ் எங்களிடம் சொன்னார். சமூகவியல் சார்ந்து LGBTQ மக்களின் வாழ்வியல் குறித்து நான் பேச இருந்தேன். ஒரு திருநங்கை உட்பட மருத்துவர்கள் இரண்டு பேர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டனர். காலை நிகழ்வுக்குச் சென்றபோது ஏதோ பிரச்னை என்பது போலச் சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்றாலும், நிகழ்ச்சியில் மருத்துவர்கள் இரண்டு பேர் பேசி முடித்திருந்தனர். இன்னொருவர் பேசத் தொடங்கியபோது அங்குப் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் இடையில் நுழைந்து மருத்துவத் துறை சாராத நபர்கள் யாரும் பேசக் கூடாது என்று கூறி மாணவர்களை வெளியேறச் சொன்னார்.
மாணவர்களும் வெளியேறிவிட்டனர். இந்த நிகழ்வு முற்றிலும் LGBTQ மக்களை அவமதிக்கும் செயலே. நிர்வாகத்திடம் முழு அனுமதி பெற்று இந்நிகழ்வை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். கல்லூரியில் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் வெளியேறிய பின் நிகழ்வும் பாதியில் நின்று போனது. அரசே பால்புதுமையினர் பற்றி கொள்கை தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதுவும் ஒரு அரசு கல்லூரிதான். அரசின் கொள்கைக்குக் கல்லூரி நிர்வாகம் எதிராக இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. இத்தனைக்கும் மதுரை மருத்துவக் கல்லூரியில் திருநங்கைக்கு என்று தனி வார்டே உள்ளது. தமிழ்நாடு முற்போக்காக உள்ளது. ஆனால் இங்கு இப்படி நடந்திருப்பது வருத்தமாக உள்ளது.” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மதுரை மருத்துவக் கல்லூரியின் டீன் செல்வராணியிடம் பேசினோம். அதற்கு அவர் கூறியதாவது, “முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வை நடத்த இடத்துக்கு அனுமதி வழங்கினோம். மருத்துவத் துறை சாராத இரு LGBTQ சமூகச் செயற்பாட்டாளர்கள் மாணவர்களிடையே பேசுவது சரியாகாது என்றோம். பின் மருத்துவர்களை மட்டும் பேச அனுமதி அளித்தோம். ஆனால் அவர்கள் அந்த இரு செயற்பாட்டாளர்களையும் பேச வைத்தனர். நாங்கள் சொன்னதைக் கேட்காததால் நிர்வாகத்தினர் நிகழ்விலிருந்த மாணவர்களை வெளியேற்றினர். கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்னை போய்க் கொண்டிருந்தது. பின் யாரும் வந்து அது பற்றி எங்களிடத்தில் பேசவில்லை. அனுமதியோடு நடத்தினர் என்பது உண்மைக்குப் புறம்பானது” என்றார்.
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த மருத்துவர் சுரேஷ் தாகூரிடம் கேட்டோம். “LGBTQ பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஒரு மாதத்துக்கு முன்பே நாங்கள் திட்டமிட்டு நிர்வாகத்திடம் அனுமதியும் பெற்றிருந்தோம். பேனர்கள் அடித்து எல்லாம் தயாராக இருந்தன. மாணவர்களும் பதிவு செய்திருந்தனர். திடீரென்று நேற்று முன்தினம் என்னை அழைத்து, இரு செயற்பாட்டாளர்கள் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கூறினர். இவர்கள் இருவருமே LGBTQ சமூக நலனுக்காக இயங்கி வருபவர்கள்தான். அந்த துறை சார்ந்த நிபுணர்கள். சட்டப் போராட்டமும் நடத்தியுள்ளனர். மாணவர்களிடம் இவர்கள் பேசுவதுதான் சரியாக இருக்கும். பின் நேற்று மாலை மீண்டும் அவர்களிடத்தில் பேசி அனுமதி கேட்டோம். கல்லூரி டீனிடம் எடுத்துச் சென்று அனுமதி பெற்றோம். காலை நிகழ்வில் விருந்தினர் பேசும்போது அவரை நிறுத்த சொல்லி மாணவர்களை வெளியேற்றியுள்ளனர். இதுவும் பாலின பாகுபாடுதானே.” என்றார்.