DYFI -ல் தீவிரமாக இயங்கி புஷ்பன்
போராட்டங்களால் கட்டமைக்கப்பட்டதுதான் கேரள அரசியல் களம். சமரக்களத்திலும், அரசியல் பழிவாங்கல் தாக்குதலிலும் ரத்த சாட்சிகளாக மாறிய தொண்டர்கள் ஏராளம். அதில் ஒருவர்தான் புஷ்பன்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் சோக்லியில் விவசாய கூலித்தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவர் புஷ்பன். 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார். சி.பி.எம் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ (DYFI) -ல் தீவிரமாக இயங்கினார்.
குடும்ப வறுமை காரணமாக பெங்களூருக்குச் சென்று, ஒரு மளிகை கடையில் வேலைக்குச் சேர்ந்தார். 1994-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கேரள மாநிலத்தில் சுயநிதி கல்லூரிகளுக்கு எதிராக சி.பி.எம் கட்சி மற்றும் அதன் இளைஞர் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உள்ளிட்டவை போராட்டதை தீவிரபடுத்தியிருந்தது. விடுமுறைக்காக ஊருக்கு வந்த புஷ்பன் அந்த போராட்டங்களில் பங்கெடுத்தார்.
கூத்துப்பறம்பு போராட்டம்:
1994 நவம்பர் மாதம் 25-ம் தேதி கூத்துப்பறம்பு பகுதியில் அர்பன் வங்கி கிளை திறப்பு விழாவில் அன்றைய அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.வி.ராகவன் ஆகியோர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்படிருந்தது. அவர்களை தடுத்து நிறுத்தும் போராட்டம் அறிவித்திருந்தது சி.பி.எம்.
நவம்பர் 25 அன்று சுமார் 2000 சி.பி.எம் தொண்டர்கள் கூத்துப்பறம்பில் போராட்டத்துக்காக கூடினர். போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் வந்தால் பிரச்னை ஆகும் என போலீஸ் எச்சரித்தது. எனவே அந்த விழாவில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவில்லை.
துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் மரணம்..
அன்றைய கூட்டுறவுத்துறை அமைச்சரான எம்.வி.ராகவன் விழாவுக்குச் செல்வதாக கூறி அங்குச் சென்றார். அப்போது சி.பி.எம் தொண்டர்கள் கோஷமிட்டவாறு அமைச்சரை நோக்கிச் சென்றனர். போலீஸார் தடுத்து தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், டி.ஒய்.எஃப்.ஐ மாவட்டத் தலைவராக இருந்த கே.கே.ராஜீவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.ரோஷன், நிர்வாகிகளான ஷிபுலால், மது, பாபு ஆகிய 5 பேர் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்ததில் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர்.
அதில் ஒரு துப்பாக்கித்தோட்டா புஷ்பனின் கழுத்து வழியாக முதுகு தண்டுவடத்தில் பய்ந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் கழுத்துக்கு கீழ்பகுதி செயல் இழந்து படுத்த படுக்கையானார் புஷ்பன்.
புஷ்பன் துப்பாக்கித்தோட்டா பாய்ந்து படுக்கையில் விழும்போது அவருக்கு வயது 24. படுக்கையிலேயே 30 ஆண்டுகளை கடத்தினார். சி.பி.எம் கட்சியினர் அவரை கவனித்துக்கொண்டனர்.
அரசியல் மாற்றங்கள்..
அடுத்து அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான அமைச்சர் எம்.வி.ராகவன் மீண்டும் சி.பி.எம் கட்சியில் ஐக்கியமானார். ஏற்கனவே சி.பி.எம் கட்சியில் இருந்த எம்.வி.ராகவன் அதிலிருந்து பிரிந்து சி.எம்.பி (கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் பார்ட்டி) என்ற கட்சியை தொடங்கினார். அவர் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
எம் வி.ராகவனை மீண்டும் சி.பி.எம் கட்சியில் இணைத்ததற்கு புஷ்பன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதுபோல சுயநிதி கல்லூரிகள் குறித்த கொள்கையை சி.பி.எம் மறுபரிசீலனை செய்தது. அப்போதும் புஷ்பன் கட்சிக்கு ஆதரவாகவே இருந்தார். அன்றைய அமைச்சர் எம்.வி.ராகவனின் மகனுக்கு சி.பி.எம் கட்சியில் பதவியும், சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட்டும் வழங்கியது. ஆனாலும், எதிர்குரல் கொடுக்காமல் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டிருந்தார் புஷ்பன்.
கேரள முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி..
கடந்த 2 மாதங்களுக்கு முன் உடலில் பல்வேறு நோய் தாக்கங்களால் கோழிக்கோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த புஷ்பன் மரணமடைந்தார். அவரது உடல் இன்று காலை கோழிக்கோடு மருத்துவமனையில் இருந்து கண்ணூரின் தலசேரிக்கு கொண்டுச்செல்லப்பட்டது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை புஷ்பனின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. சகாவு புஷ்பனின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் சார்பிலும், சி.பி.எம் கட்சி சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb