தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க., பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது.
பவள விழா பொதுக்கூட்டத்தை நடத்த, கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். அதன்படி தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க., பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களான வைகோ, கி.வீரமணி, தொல்.திருமாவளவன், செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, கருணாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்று இருக்கின்றனர்.
இவ்விழாவில் பேசிய கருணாஸ், ” மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சாதாரணமாக தமிழ்நாடு பொதுத்துறைக்கு சொந்தமான ஒரு இடத்தில் டீக்கடை வைத்திருந்தவருக்கு மகனாக பிறந்த என்னை ‘சின்ன வயசுல தஞ்சாவூர்ல கூட்டம் நடக்கும்போது, எங்கப்பா என்னைய தோளில் தூக்கி வச்சு ‘கரகர குரலில் பேசுறாரே அவர்தான்டா கலைஞர்’-னு காட்டுனாரு’. அந்த பொன்னான தலைவருடைய கட்சியின் 75 வது ஆண்டு பொன்விழாவில், மிகச்சிறந்த தலைவர்கள் எல்லோரும் அமர்ந்திருக்கக்கூடிய இந்த மேடையில் இருப்பது மகிழ்ச்சி.
கருணாநிதி என்ற பெயரை நான் சென்னையில் வாழ்வதற்காக கருணாஸ் என்று மாற்றிக்கொண்டேன். ஒட்டுமொத்தமாக திராவிட பாரம்பரியத்தில் வாழ்ந்தவன் நான். சமூக நீதிக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து போராடிவரக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.கதான். இந்த இயக்கத்தின் ஆணிவேரை எந்த மதவாத சக்தியாலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது.வெள்ளிவிழா கொண்டாடியபோது திமுக ஆட்சிப்பொறுப்பில் இருந்தது.
பொன்விழா கொண்டாட்டத்தின்போதும் திமுக ஆட்சியில் இருந்தது. பவள விழாவிலும் திமுக தான் ஆட்சியில் இருக்கிறது. நூற்றாண்டு விழா கொண்டாடும் போதும் தி.மு.கதான் ஆட்சியில் இருக்கும். நூறாண்டு விழா கொண்டாட்டத்தில் திமுக ஆட்சியில் இருக்கும். அப்போது, அனைவர்க்கும் ட்விஸ்ட் ஒன்று இருக்கும். அன்றைய நாளில் என் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக இருப்பார்” என புகழாரம் சூட்டும் வகையில் பேசினார்.