Isha: மருத்துவர் மீது பாலியல் குற்றச்சாட்டு; எஸ்பி அலுவலகத்துக்கு வந்த ஈஷா நிர்வாகி.. என்ன நடந்தது?

கோவை ஈஷா யோகா மையம் சார்பில் நடமாடும் மருத்துவக் குழு இயங்கி வருகிறது. அதில் சரவணமூர்த்தி என்ற மருத்துவர் பணியாற்றி வந்தார். பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்ட முகாம்களில், சரவணமூர்த்தி அரசுப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது.

போக்சோ வழக்கு

இதுகுறித்து சுமார் 12 மாணவிகள் அளித்தப் புகாரின் அடிப்படையில் சரவணமூர்த்தி கைது செய்யப்பட்டார். இதில் காவல்துறை மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம் புகார் தெரிவித்துள்ளனர்.

ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன், பேராசிரியர் காமராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள்,

ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம்

“கடந்த 6ம் தேதி ஈஷா அறக்கட்டளையில் பணிபுரியும் மருத்துவர் சரவணமூர்த்தி சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேல் விசாரணையை தொடராதது ஏன். காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் விசாரணையை விரிவுபடுத்தாதற்கு காரணம் என்ன.

சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல் படி, மாணவிகளை பரிசோதிக்க ஒரு பெண் மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும். அவர்கள் ஏன் பெண் மருத்துவரை நியமிக்கவில்லை. கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம் சம்பவம் , வால்பாறை கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் போல இதை ஏன்  விசாரிக்கவில்லை.

ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம்

ஈஷாவில் பல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் புகாரை வாபஸ் பெற்றதால் வழக்கை முடித்து வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கேட்டு நாங்கள் போராடுகிறோம்.” என்றனர்.

முன்னதாக ஈஷா யோகா மையம் மீது அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஈஷா அறக்கட்டளை நிர்வாகி தினேஷ் ராஜா சார்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈஷா யோகா மையம் செய்யும் நன்மைகளுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் அவதூறுகளை பரப்புகின்றனர்.

ஈஷா அறக்கட்டளை நிர்வாகி தினேஷ் ராஜா

அவர்களிடம்  முகாந்திரம் இருந்தால் நீதிமன்றத்தையோ, காவல்துறையையோ அணுகி தீர்வு காணலாம். ஒரு குழுவாக இணைந்து கொண்டு, பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அடிப்படை ஆதாரம் இல்லாமல் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடுகின்றனர். பியூஷ் மனுஷ், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆதியோகி மற்றும் லிங்கபைரவி குறித்து கொச்சையாக அவதூறு பரப்பியுள்ளார். ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில், எழுப்பப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

தினேஷ்

காமராஜ் என்பவர் தான் சமீப காலமாக தொடர்ந்து ஈஷா மீது அவதூறு பரப்புகிறார். அவரின் இரண்டு மகள்களே ஈஷாவில் தன்னார்வலர்களாக உள்ளனர். கடந்த வாரம் கூட காமராஜ், இரண்டு முறை அவர்களை சந்தித்து இனிப்புகள் வழங்கி சென்றார். அதே நேரம் எங்கள் மீது காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கிறார்.” என்றார்.

ஈஷாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பேராசிரியர் காமராஜ், “ஈஷாவில் கடந்த வருடம் மூத்த மகளுக்கு இனிப்பு காரம் கொடுத்ததை இப்போது கொடுத்ததாக பொய் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். என் இளைய மகளை பார்க்க முடியவில்லை.

மகளை பார்க்க வேண்டும் என நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளேன். நான் ஈஷாவிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும், அப்போதுதான் தங்களுடன் பேச முடியும் என மகள்களை வைத்து மிரட்டுகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.