Apartment: “அப்பார்ட்மென்ட் வாங்குவதிலிருக்கும் சிக்கல்கள்” – நீதி ஆலோசகர் சுந்தரி ஜெகதீசன் விளக்கம்

சொந்த வீடு என்பது ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் கனவு. அந்தக் கனவை அடையும் நோக்கில் சிலரின் அவசர முடிவுகளும், முன்னெடுப்புகளும் பொருளாதார சிக்கல்களைக் கொண்டுவந்துவிடுகின்றன. அதனால், வீடு வாங்கும் முடிவில் இருக்கும் ஒருவர் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் என நிதி ஆலோசகர் சுந்தரி ஜெகதீசன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

சுந்தரி ஜெகதீசன்

ரியல் எஸ்டேட் நன்றாக வளர்ந்து வருகிற நிலையில் எப்படிக் கவனித்து வீடு வாங்க வேண்டும்?

ஹைதராபாத் மும்பை போன்ற நகரங்களை விட, சென்னையில்தான் எல்லாவிதமான ரியல் எஸ்டேட்டுகளும் வளர்ந்து வருகிறது. வெள்ளம், புயல் வந்தாலும் மக்கள் வீடு வாங்குவதில் ஆர்வமாகவே இருக்கிறார்கள். அதில் தவறில்லை. எல்லோரும் சிறப்பாக இருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால் கனவை நோக்கி நகர்வதில் கவனமாக இருக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. குறிப்பாக, பொருளாதார முடிவுகளை எடுக்கும் போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. ஏனென்றால், பயத்தாலும், பேராசையாலும் நம் முடிவுகள் தவறாகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

அப்பார்ட்மெண்ட்

அப்பார்ட்மென்ட் கலாச்சாரத்துக்குள் வரும் மக்களுக்கு இலவச சலுகைகள், ஆடம்பர வசதிகள் என மனம் கவரும் விளம்பரங்கள் வருகின்றன. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

அப்பார்ட்டமெண்ட் விற்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஏகப்பட்ட இலவசங்கள் மற்றும் சலுகைகளை வழங்குகிறார்கள். ஆனால், அந்த சலுகைகளில் எவையெல்லாம் நமக்கு அவசியம். எந்த ஆடம்பரங்களை நாம் தொடர்ந்து பயன்படுத்துவோம் என்ற புரிதல் முக்கியம். உதாரணத்துக்கு நீச்சல் குளம் (ஸ்விம்மிங் ஃபூல்) போன்றவை இருந்தாலும் நாம் அதில் எவ்வளவு நாட்கள் இறங்கி விளையாடப் போகிறோம்… எனவே நமது தேவை என்ன என்பதையும் அந்த தேவைக்கு ஏற்றார்போல ஒரு ப்ளாட் வாங்குவதுதான் புத்திசாலித்தனம்.

கட்டி முடித்த அப்பார்ட்மென்ட்டை வாங்குவது நல்லதா? அல்லது கட்டிக்கொண்டு இருக்கிற அபார்ட்மெண்டை வாங்குவது நல்லதா?

இந்த இரண்டிலும் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. ஏற்கெனவே கட்டி முடித்த அப்பார்ட்மென்ட் என்றால், அது எந்த தரத்தில் கட்டப்பட்டது என நமக்குத் தெரியாது. அதன் தரத்தையும் நம்மால் உறுதி செய்வது கடினம். அதே நேரம் கட்டிக்கொண்டிருக்கும் ப்ளாட் முன்பதிவு செய்தால், அதை எப்போது கட்டி முடிப்பார்கள் என்பது தெரியாது. ஒருவேளை கட்டி முடிக்க நீண்ட காலம் பிடித்தால், வாடகை, வாங்கிய கடனுக்கு வட்டி, இஎம்ஐ எனப் பொருளாதார சிக்கல்கள் வார வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த சூழலில் நமக்கு முக்கியம், அந்த நிறுவனத்தின், பில்டரின் நம்பிக்கை, நற்பெயர், தரம். இவற்றைச் சரியாக அடையாளம் கண்டு வாங்கினால் நல்லது.

Apartment

பில்டர் பற்றிக் கவனிக்க வேண்டியவை?

ஒரு அப்பார்ட்மென்ட் வங்க முடிவு செய்தால், முதலில் நாம் சோதிக்க வேண்டியது, அந்த கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் இடம் அந்த பில்டருக்கு சொந்தமானதா… சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா… ஏதேனும் வேறு சட்டச் சிக்கல்கள் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள வேண்டும். பில்டர் இதற்கு முன் கட்டிய கட்டிடங்களில் தரத்தைச் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். அவர் கட்டிய பழைய அப்பார்ட்மென்ட் சென்று விசாரிக்கலாம். பில்டரின் பின்புலங்களைக் கவனித்துச் சரி பார்த்துகொள்ளவது நல்லது.

அப்பார்ட்மென்ட்களில் லிப்ட், பார்க்கிங் ஏரியா போன்ற பொது இடங்களைப் பயன்படுத்துவதில் நிறையச் சிக்கல்கள் இருக்கிறதே… இதை எப்படிக் கவனிப்பது?

நாம் ஒரு அப்பார்ட்மென்ட் வாங்க சென்றால், அந்த அப்பார்ட்மெண்டின் அழகு, வாஸ்து, இலவசம், சலுகை போன்றவற்றை வைத்து மட்டும் முடிவு செய்துவிடுவோம். ஆனால், நமக்கான பார்க்கிங், அதன் பயன்பாடு எப்படி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வீடு வாங்கும்போதே தேவைக்கு ஏற்றார்போல பார்க்கிங் சேர்த்து வாங்குவது நல்லது.

சுந்தரி ஜெகதீசன்

அப்பார்ட்மென்ட் நம்ம பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்யலாம்?

நாம் அப்பார்ட்மென்ட், வீடு வாங்க முடிவு செய்துவிட்டால் அதற்கென ஒரு திட்டம் போட்டிருப்போம். எப்படிப் பணத்தைப் புரட்டுவது, அதை எப்படித் திருப்பிச் செலுத்துவது என எல்லாவற்றையும் முடிவு செய்திருப்போம். ஆனால், நம் பட்ஜெட்டை விட அதிகமான தொகைக்கு வீடு வாங்க ஆசைப்பட்டால், its a financial sucide. கண்டிப்ப அதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இலவசங்களை முதன்மைப்படுத்தி சமரசம் செய்ய வேண்டாம். பட்ஜெட்தான் முக்கியம். வீடு குறிப்பிட்ட நேரத்தில் கட்டி முடிக்கப்படுமா? நமக்குத் தேவையான வசதிகள் இருக்கிறதா? நம்ம பட்ஜெட்டில் இருக்கிறதா? என இது மூன்றையும் தெளிவாகச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

தனி வீடு என்ற கனவிலிருந்து மக்கள் இந்த அப்பார்ட்மென்ட் கல்ச்சர் நோக்கிப் போகிறார்களே? என்ன காரணம்?

30 வருடங்களுக்கு முன்பு இருந்த மாதிரியான நிலப்பரப்பு இன்று இல்லை. தற்போதைய விலைவாசி சூழலில் தனிவீடு வேண்டுமானால் சிட்டிக்கு வெளியே மிக நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சிட்டிக்குள் வேண்டுமானால் அதற்கான சூழல் நடுத்தர குடும்பத்துக்குச் சிரமம். இதுமாறியான காரணங்களால் இந்த அப்பார்ட்மெண்ட் கல்ச்சர் தவிர்க்கவே முடியாததாகிவிட்டது. எனவே பட்ஜெட்க்குள் அப்பார்ட்மென்ட் வந்துவிடுவதால் இது வளர்கிறது.

சுந்தரி ஜெகதீசன்

வீடு வாங்குவது, சொத்துகள் வாங்குவது போன்றவற்றில் மட்டும் ஏன் மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள்?

பொதுவாக மக்களுக்கு வீடுகள் மீது உணர்ச்சிகள் அதிகம். மற்ற முதலீடுகளை விட வீடு வாங்குவதை உணர்வுப்பூர்வமாகப் பார்க்கிறார்கள். அதனால் சலுகைகள் மற்றும் இலவசங்களைப் பார்த்து ஏமாந்துவிடாமல், பகுத்துப் பார்க்கும் அறிவோடு முடிவு எடுத்தால் நம்மால் நல்லதைத் தேர்வு செய்ய முடியும்.

முழுமையான பேட்டி கீழே: