“என்றைக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியானது தி.மு.க., – திராவிடர் கழகம் எனும் இரட்டைக்குழல் துப்பாக்கியின் மூன்றாவது குழலாக இருப்போம். தொடர்ந்து இந்த களத்தில் உங்களோடு நின்று சனாதன சக்திகளுக்கு எதிராக முழங்குவோம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பவள விழாவில் பேசியிருக்கிறார்.
தி.மு.க.,வின் 75-ம் ஆண்டு முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 17 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இது தி.மு.க.,வினர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தது. கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளும் வகையில் தி.மு.க., பவள விழா பொதுக்கூட்டத்தை நடத்த, கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். அதன்படி தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க., பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களான வைகோ, கி.வீரமணி, தொல்.திருமாவளவன், செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், பேராசிரியர் ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்று இருக்கின்றனர். அப்போது இவ்விழாவில் பேசிய வி.சி.க., தலைவர் தொல்.திருமாவளவன், “தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் இந்தியைத் திணித்தாலும் ஏற்கமாட்டேன் என்பவர்தான் ஸ்டாலின். கலைஞர் கூட திராவிட மாடல் எனச் சொல்லியதில்லை. தளபதி ஸ்டாலின் இந்தியா முழுவதும் திராவிட மாடல் என்பதை பிரகடனப்படுத்தி வருகிறார். இவரை வெறும் குடும்ப வாரிசு என்கிறார்கள். இவர் கருத்தியல் வாரிசு.
பெரியாரின் கருத்தியல் பேரன். இந்திய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் உறவு எப்படி இருக்க வேண்டும், மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வு எப்படி இருக்க வேண்டும், மாநில சுயாட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய விவாதத்தை இந்தியாவில் ஏற்படுத்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான். கலைஞர் எத்தனையோ பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர்தான் சமத்துவபுரம் என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தார்.
சேரியையும் ஊரையும் ஒன்றாக்கினார். அப்படி ஒரு திட்டத்தை உலகில் எந்தத் தலைவனும் யோசித்ததில்லை. அரை நூற்றாண்டு காலம் கலைஞரைச் சுற்றியே இந்திய அரசியலும் தமிழ்நாடும் இயங்கியது. ஆனால், இங்கே இன்றைக்கும் இந்த அணி ஒருங்கிணைவோடு பயணிக்கிறதென்றால் அதற்கு அண்ணன் தளபதியின் ஆளுமை மிக்க வழிநடத்தல்தான் காரணம். இன்றைக்கு அண்ணன் ஸ்டாலினின் தலைமையில் நடப்பது அண்ணாவின் ஆட்சி. என்றைக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக – திராவிடர் கழகம் எனும் இரட்டைக்குழல் துப்பாக்கியின் மூன்றாவது குழலாக இருப்போம். தொடர்ந்து இந்த களத்தில் உங்களோடு நின்று சனாதன சக்திகளுக்கு எதிராக முழங்குவோம்.” என்று பேசியிருக்கிறார்.