“திருப்பதி லட்டு விவகாரத்தில் கடவுளுடன் விளையாடி வருகிறார் சந்திரபாபு நாயுடு. சந்நிரபாபு நாயுடுவுக்கு கடவுள் நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும்” என்று ஆந்திர முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா பேசியிருக்கிறார்.
திருப்பதி கோயிலில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு குறித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசிய ரோஜா, ” உண்மையில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். சந்திரபாபு நாயுடு தனது சுயநலத்திற்காக எதுவும் செய்வார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் ஒரு திட்டமும் செய்யவில்லை. தனது தவறை மறைக்கும் விதமாக, லட்டு விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெகன் மோகன் ரெட்டியை அரசியல் ரீதியாக பூஜ்யமாக்கவே சந்திரபாபு நாயுடு இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார். சந்திரபாபு நாயுடுவுக்கு பக்தியும் இல்லை. கடவுள் மீது நம்பிக்கையும் இல்லை. கடவுளை தனது சுய நலத்துக்காக பயன்படுத்துகிறார். சந்திரபாபு நாயுடு கட்சி அலுவலகத்தில் இருந்து பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. லட்டு விவாகரத்தில் நடவடிக்கை எடுக்காமல், நாடகம் செய்து வருகிறார். கடவுள் மீது உண்மையான பக்தி இருக்கும் முதல்வர் என்றால், இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை தண்டித்திருக்க வேண்டும். மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்.
மத்தியில் கூட்டணியிலும், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு நடத்தும் எந்தவொரு விசாரணையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். திருப்பதி தேவஸ்தான லட்டுவில் எந்தவொரு கலப்படமும் செய்யப்படவில்லை. சந்திரபாபு நாயுடு அரசியலுக்காக கடவுளை ரோட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார். லட்டுவில் கலப்படம் கலந்து உள்ளதா? இல்லையா? என மக்கள் குழப்பத்தில் உள்ளனர். லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்.
லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு மிக கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். சந்திரபாபு நாயுடுவுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என அனைத்து கோயில்களிலும் வேண்டிக் கொள்கிறேன். முடிந்தால் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். இல்லையெனில் ராஜினாமா செய்து விட்டு வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். சனாதன தர்மத்தை பின்பற்றுவதாகக் கூறும் இவர்கள் கடவுளை மதிப்பதில்லை, கடவுளை வணங்குவதில்லை, கடவுளை போற்றுவதில்லை. சனாதனத்தின்படி பேசும் பவன் கல்யாண், அவர் வீட்டில் சனாதனத்தை கடைப்பிடிப்பதில்லை. பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடு எழுதி கொடுத்ததை பேசி வருகிறார்” என்று காட்டமாக பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…