செந்தில் பாலாஜி சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்திருப்பதை திமுக’வினர் பெரும் விமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி கொடுக்க பணம் பெற்றதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை இதில் குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்ட பிறகும், சுமார் 15 மாதங்களாக நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு வந்தார்.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்த உச்ச நீதிமன்றம், நேற்று காலை 25 லட்சம் பிணைத் தொகை உள்ளிட்ட நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இதனால், தி.மு.க ஆதரவாளர்கள் புழல் சிறைக்கு வெளியே செந்தில் பாலாஜியை மலர் தூவி, பட்டாசுகள் வெடித்து வரவேற்றனர். சிறையிலிருந்து வெளியே வந்தவுடனே முதல் வார்த்தையாக, “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. வாழ்நாள் முழுவதும் அவருக்கு நான் நன்றி சொல்வேன். அமைச்சர் உதயநிதிக்கு நன்றி. இது என்மீது போடப்பட்ட பொய் வழக்கு. இதை எதிர்த்து சட்ட ரீதியாகப் போராடுவேன்” என்று கூறியிருந்தார்.
செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளிவந்திருப்பது குறித்து மு.க.ஸ்டாலின், “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாள்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாள்கள் சிறை வாழ்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது” என்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டுத் திரும்பியவுடனே, அவரை நேரில் சந்தித்திருந்தார் செந்தில் பாலாஜி. இருவரும் மாறிமாறி ஆரத்தழுவிக் கொண்டனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செந்தில் பாலாஜி, “471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில். ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.! தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்.. உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்”என்று கூறியிருக்கிறார்
இப்படி மாறி மாறி இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, அன்பைப் பொழிவது குறித்து உங்களது நச் கமெண்டை பதிவிடவும்.